Saturday, July 28, 2012

நோன்பின் ஒழுக்கங்கள்

நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்ககாட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக்கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்புவரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர்அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.

Monday, July 23, 2012

ரமாளான் மாதம் சிறப்புகள்

முன்னுரை
அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.
ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், 'அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது' என்ற சிறப்பைப் பெறுகிறது.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:
'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)
2. நோன்புக்குரிய மாதம்.
உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
அல்லாஹ் சொல்கிறான்:
'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)
3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,
'..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.
அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.
மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.
4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன...' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)
வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:
'வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும'; - (அல்குர்ஆன் 78 : 19)
ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
5. அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.... - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.
6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.
'....நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன....' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,
'...நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.
'....ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
8. நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.
'...நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.
9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.
'...நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.
'...ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)
11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 619)
12. தக்வா பயிற்சிக்குரிய மாதம்.
தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்'. (அல்குர்ஆன் 2:184)
13. அருள் செய்யப்பட்ட மாதம்.
'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது....' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)
முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக.

Saturday, July 21, 2012

புனித ரமழானில் இறையச்சத்தை தேடுவோம்




இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183) நபி (ஸல்) கூறினார்கள்:

இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)

ரமழானின் சிறப்பு

இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:

இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,

ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.

ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே

குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக மணமுடையது,

இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.

மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்

ரமழானில் அமல்கள்

ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையான நோன்பு

இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)

வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:

பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)

நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் நான் ஒரு நோன்பாளிஎன்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவு நேரத் தொழுகை

நபி (ஸல்) கூறினார்கள்:

இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)

இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

3. தருமம்

நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்என்று கூறினார்கள். (திர்மிதி)

தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.

நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

4. குர்ஆன் ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்

நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.

இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா

ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்

நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாதுஎன நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)

எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை

நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும்.

குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)


பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை.

உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)


எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)


இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும்

 நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கப்படாதவை


உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)

எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)

இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)

வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சலுகையளிக்கப்பட்டவர்கள்

நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், அல்லாஹ் மிக அறிந்தவன்