கலைச்சொற்கள்

இணை கற்பித்தல்
அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லைஎன்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணை கற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

சொர்க்கம், சொர்க்கச் சோலைகள்
இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும்.

சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில் நிரந்தரமாக இருப்பார். விரும்பிய அனைத்தும் அவருக்கு அங்கே கிடைக்கும். கவலையோ, சோர்வோ, சங்கடமோ, மன உளைச்சலோ இல்லாமல் சொர்க்கத்தில் நுழைந்தவர்கள் இன்பத்தை அனுபவிப்பார்கள்.

தூதர்கள்
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத் தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.

முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.

தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படாது. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.

தொழுகை
முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்.
தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும் வணக்கமாகும்.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ஐந்து நேரங்களில் தொழுகையை நிறைவேற்றி ஆக வேண்டும். இது தவிர அவரவர் விருப்பப்பட்டு தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொழுது இறைவனின் அன்பை பெறலாம்.

நயவஞ்சகர்கள்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்து சேர்ந்தது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு முன் ஆட்சியையும், அதிகாரத்தையும் அனுபவித்து வந்த சிலர், உளப் பூர்வமாக இஸ்லாத்தை ஏற்காமல் சுய நலனுக்காகவும், முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வந்தனர்.

இவர்கள் முஸ்லிம்களைப் போலவே பள்ளிவாசலில் வந்து தொழுகையிலும் பங்கெடுப்பார்கள். போருக்கும் புறப்படுவார்கள். ஆயினும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை மக்காவில் உள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வழங்குவதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களைப் போலவே கலந்து கொள்வார்கள்.
இவர்களைத் தான் குர்ஆன் நயவஞ்சகர்கள் எனக் குறிப்பிடுகிறது.

நம்பிக்கை கொள்வது
திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் நம்பிக்கை கொள்வது’ ‘நம்பிக்கை கொண்டோர்என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.

பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை நாம் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

மாறாக குறிப்பிட்ட சில விசயங்களை உளமாற ஏற்று நம்பிக்கை கொள்வதையே குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ், வானவர்கள், இறைத்தூதர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்கள், மறுமை நாள், அங்கு நடக்கும் விசாரணை, மறுமை நாளுக்கு முன் நடக்கும் அமளிகள், நல்லோர்க்குக் கிடைக்கும் சொர்க்கம் எனும் பரிசு, தீயோர்க்குக் கிடைக்கும் நரகம் எனும் தண்டனை, மண்ணறை வேதனை, எல்லாமே இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதி போன்றவற்றை நம்புவதையே நம்பிக்கை கொள்வதுஎன குர்ஆன் குறிப்பிடுகிறது.

நரகம்
அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதர்களின் வழியைப் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும்.
சில குற்றங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் இறைவனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம் செல்வார்கள். மன்னிக்கப்படாவிட்டால் தங்களது தவறுகளுக்கேற்ப தண்டனைகளை அனுபவித்து விட்டுப் பிறகு சொர்க்கம் செல்வார்கள்.

நோன்பு
வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை இறைவனுக்காக உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும்.
ஆண்டுதோறும் ரமலான் எனும் மாதம் முழுவதும் அவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான பரிகாரமாகவும் நோன்பு கூறப்பட்டுள்ளது.

வானவர்கள்
இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப் பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது. ஏக இறைவன் தனித்தே தனது காரியங்களை ஆற்றவல்லவன் என்றாலும் வானவர்கள் என்ற இனத்தைப் படைத்து அவர்கள் மூலம் பல்வேறு வேலைகளை வாங்குகிறான்.

அல்லாஹ்
அல்லாஹ் என்பது அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏக இறைவனை மட்டுமே குறிக்கும் அரபு மொழிச் சொல்லாகும்.

நபிகள் நாயகத்துக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.
அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்; அவன்தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள்யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத் தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின்
நம்பிக்கையாக இருந்தது.

அல்லாஹ்வுக்கு மனைவியும், மக்களும் இல்லை. அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லை. அதனால் உடன் பிறப்புகளும் இல்லை. அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை. அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. தூக்கம், மறதி, அசதி, களைப்பு, பசி, தாகம், இயற்கை உபாதை, முதுமை, நோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை. எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை. இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன்தான் அல்லாஹ்.

அய்யூப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத கிருஸ்த்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.

அரஃபாத்
மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா அல்லது அரஃபாத் ஆகும். ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம்மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடாரமடித்து இங்கே தங்குவார்கள். இந்த நாளில் சிறப்பான ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தப்படும்.

அர்ஷ்
எல்லாம் வல்ல ஏக இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஆசனமே அர்ஷ் எனப்படும். இது வானங்களையும் பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

அல்யஸஉ
அல்யஸஉ என்பார் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48, ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விபரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.

அன்ஸார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள் எனப்படுவர். இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த மக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் வீடு, சொத்து, வியாபாரம், ஆடைகள் அனைத்திலும் சரிபாதியாக பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

ஆதம்
இஸ்லாமிய நம்பிக்கைப் படி அல்லாஹ் முதல் மனிதரைக் களி மண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர்தான் ஆதம். இவர்தான் முழு உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தையாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான். கிருத்தவர்கள் இவரை ஆதாம் என்பர்.

ஆது
ஹுத்எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே ஆதுசமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹுத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.

இஞ்சீல்
இவ்வேதம் ஈஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

இஃதிகாஃப்
இச்சொல்லுக்குத் தங்குதல் என்று பொருள். இஸ்லாமிய நம்பிக்கைப்படி சிறிது நேரம் அல்லது சில நாட்கள் பள்ளிவாசலில் தங்கி இறை நினைவிலும், வழிபாட்டிலும் இருப்பது தான் இஃதிகாஃப் எனப்படும். ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக ஒருவர் முடிவு செய்தால், அந்த நாள் முழுவதும் குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் போன்ற எந்த அலுவலிலும் ஈடுபடக் கூடாது.
ஒரேயடியாக உலகைத் துறப்பதைத் தடை செய்த இஸ்லாம் குடும்பத்துக்கோ, உலகத்துக்கோ பாதிப்பு ஏற்படாத இந்த சிறிய அளவிலான தவத்தை மட்டும் அனுமதிக்கிறது. ஒரிரு நாட்கள் இவ்வாறு பள்ளிவாசலில் தங்கி உலகத் தொடர்பைத் தற்காலிகமாக அறுத்துக் கொண்டவர் வெளியே வந்ததும் பக்குவம் பெற்றவராக நடப்பார். அவருக்கும், உலகுக்கும் இதனால் பயன் கிடைக்கும்.

இத்தா
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்த கால கட்டமே இத்தா எனப்படும். கணவனை இழந்த பெண் நான்கு மாதம் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது.

இத்ரீஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56, 21:85 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை.

இப்ராஹீம்
இறைத்தூதர்களிலேயே அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். மற்றவர்களுக்கு வழங்கிய அளவுக்கு அற்புதங்கள் வழங்கப்படாவிட்டாலும் இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி இஸ்ஹாக், யஃகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூசுப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே. யூதர்களும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கக்கூடிய மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை ஆப்ரஹாம்என்று யூத கிருத்தவர்கள் கூறுவார்கள்.

இப்லீஸ்
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழி கெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டிணான்.
என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப் பட்டவர்களையே உன்னால் வழி கெடுக்க முடியும்என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.

இம்ரான்
இவர் ஈஸா நபியின் தாயாரான மரியம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் குர்ஆனில் கூறப்படவில்லை.

இல்யாஸ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை. (திருக்குர்ஆன் 37:123, 6:85)

இஸ்தப்ரக்
இஸ்தப்ரக் என்பது ஒருவகைப் பட்டாடையின் பெயராகும். இது பட்டாடைகளில் அதிக அடர்த்தி உடையதாகும்.

இஸ்ராயீல்
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யஃகூப்.
யஃகூப்பின் மற்றொரு பெயர் இஸ்ராயீல். இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யஃகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.

இஸ்மாயீல்
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். யூத, கிருத்தவர்கள் இவரை இஸ்மவேல’; என்பர்.

இஸ்ஹாக்
இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத்தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம் அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை.

இஹ்ராம்
ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும் போது எடுக்கும் உறுதிமொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதி மொழி எடுக்கும்போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும்.

ஈஸா
கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது. ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறை மகன் அல்லர் என்று குர்ஆன் கூறுகிறது.

உம்ரா
மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல் உம்ரா எனப்படும். உம்ரா என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கென தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்த கால கட்டத்தில் இல்லறம் நடத்துதல், வேட்டையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உஸ்ஸா
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையுடையோர் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே உஸ்ஸா எனப்படும்.

ஃபிர்அவ்ன்
யூத, கிருத்தவர்களால் பாரோன்எனக் குறிப்பிடப்படும் ஃபிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாகத்; திகழ்ந்தவன். தன்னையே கடவுள் என வாதிட்டவன். தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான். இவனுக்கு ஓரிறைக் கொள்கையை உணர்த்தவும், அவனது கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் மூஸா(மோசே) ஹாரூன் (ஆரோன்) ஆகிய இருவரையும் தூதர்களாக இறைவன் அனுப்பினான்.
ஆயினும் அவன் திருந்தவில்லை. அவனும், அவனது படையினரும் கடலில் முழ்கடிக்கப்பட்டனர்.

கஅபா
முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா - 3:96. இதிலிருந்து ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை அறியலாம்.
செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது. அவருக்கு பின் கஅபா சிதிலமடைந்து பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக் கட்டளைப்படி அந்த பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.
இறைவனின் அற்புதமான வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் கால் கோடி மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது. அந்தத் தண்ணீர் காரணமாக அந்த பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும் மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.
கிப்லா
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும் போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும.; கஅபா ஆலயத்தையே தொழுவதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்க கூடாது. எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏக இறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பதுதான் இதற்குக் காரணம்.

பலரும் சேர்ந்து தொழும் இடங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத்தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.
மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்.

குர்பானி
முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும். இவ்வாறு பலியிடுவது இறைவனைச் சென்றடையும் என்று கருதக் கூடாது. ஏனெனில் அவற்றின் இரத்தங்களோ, இறைச்சிகளோ அல்லாஹ்வை அடையாது என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது. (22:37)

பொருளாதாரம் தொடர்பான எதையும் இறைவனுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. எனவே ஏழைகள் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும், இப்ராஹீம் நபியைப் போல் எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதை உணர்த்தும் வகையிலும் தான் இது கடமையாக்கப்பட்டுள்ளது.

தவாஃப்
தவாஃப் என்றால் சுற்றுதல் எனப் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தவாஃப் என்பது கஅபா ஆலயம் நமக்கு இடது கைப்பக்கம் இருக்குமாறு ஏழு தடவை சுற்ற வேண்டும். இதுதான் தவாஃப் என்பது. இது ஹஜ் மற்றும் உம்ராவின் ஒரு பகுதியாகும்.

தவ்ராத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டது போல மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதமே தவ்ராத். தவ்ராத் பற்றியும், மூஸா நபி பற்றியும் பல இடங்களில் குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது.

தாலூத்
தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும்பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான்.

தாவூத்
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.

துப்பஉ
துப்பஉ என்ற பெயரில் ஒரு சமுதாயம் இருந்ததாகவும், அவர்கள் குற்றம் புரிந்ததால் அழிக்கப்பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது. அவர்களைப் பற்றிய அதிகமான விபரம் ஏதும் கூறப்படவில்லை.

துல்கர்னைன்
இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்த நல்ல மன்னர் என்று குர்ஆன் கூறுகிறது. இவரைப் பற்றி குர்ஆன் 18:83 முதல் 18:98 வரை கூறப்பட்டுள்ளது.

துல்கிஃப்ல்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி கூறவில்லை.

நபிமார்கள்
நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள். நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை.

நூஹ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் மிகவும் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார்.

பஜ்ரு
பஜ்ர் என்பது ஐந்து நேரத் தொழுகையில் வைகறையில் தொழப்படும் முதல் தொழுகையின் பெயர் ஆகும். சில இடங்களில் வைகறை நேரத்தையும் இச்சொல் குறிக்கும்.

பாபில் நகரம்
திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது ஈராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.

மத்யன்
இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகரமாகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

மர்யம்
இவர் ஈஸாவின் தாயார். கிருத்தவர்கள் இவரை மேரி என்பர். திருக்குர்ஆனில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் பெண்மணி இவர்தான்.

மன்னு, ஸல்வா
மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க புகாரி : 4478, 4639,5708) அவ்வுணவுகள் யாவை என்பதை அறிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. இறைவன் தன் புறத்திலிருந்து சிறப்பாக அந்த சமுதாயத்திற்கு உணவளித்தான் என்ற அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.

மனாத்
நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே மனாத்.

மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக்குன்றின் பெயராகும்.

மஸீஹ்
ஈஸா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

மஸ்ஜிதுல் ஹராம்
கஅபா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

முஸ்லிம் - முஸ்லிம்கள்
முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்என்பதாகும். இச்சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தாமல் எல்லா இடங்களிலும் முஸ்லிம் என்றே குறிப்பிடுகிறோம்.

இச்சொல்லை தமிழக முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லீம் என்று நெடிலாக உச்சரித்தும் எழுதியும் வருகின்றனர். அது தவறாகும். முஸ்லிம் என்பதே சரியாகும்.

மூஸா
திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிருத்தவர்கள் இவரை மோஸே என்பர்.

யஃகூப்
இஸ்ராயீல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

யஃஜூஜ், மஃஜூஜ்
இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்னைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 18:94, 21:96)

யஸ்ரிப்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பெயர்தான் யஸ்ரிப். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர் மதீனா எனச் சுருங்கியது.

யஹ்யா
இவர் ஜகரிய்யா நபியின் மகனும் இறைத்தூதருமாவார். இவர் ஜகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிருத்தவர்கள் இவரை யோவான் என்பர்.

யூஸுஃப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மற்ற இறைத்தூதர்களிலிருந்து பலவகையான தனிச் சிறப்புகள் இவருக்கு உள்ளன. பாரம்பரியம், குணம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்கவேண்டுமென்றால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும். இவரும் இறைத்தூதராக இருந்தார். இவரது தந்தை யஃகூப் என்றழைக்கப்படும் இஸ்ராயீல். இவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக். அவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீம். அவரும் இறைத்தூதர் ஆவார். இந்த கருத்தில் நபிமொழியும் உள்ளன. (புகாரி 3382, 3390, 4688)
குர்ஆனில் இவருடைய வரலாறுதான் சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான். இவரைப் பற்றி அறிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

யூனுஸ்
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப்போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே அவர்கள் திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது. இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே அவரை அல்லாஹ் தண்டித்தான்.

ருகூவு
பணிதல் என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகையில் குனிந்து சிறிது நேரம் நின்று கூற வேண்டியவற்றைக் கூறுவது ருகூவு எனப்படும். பணிதல் என்ற பொருளிலும், தொழுகையின் ஒரு நிலை என்ற பொருளிலும் திருக்குர்ஆனில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைச் சற்று கவனித்தால் கண்டு கொள்ளலாம்.

ரூஹு, ரூஹுல் குதுஸ்
வானவர்களின் தலைவராக திகழ்பவர் ஜிப்ரயீல் எனும் வானவர். இவர் திருக்குர்ஆனில் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். ரூஹு, ரூஹுல் குதுஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார். ரூஹு என்றால் உயிர் என்றும், ரூஹுல் குதுஸ் என்றால் பரிசுத்த உயிர் என்றும் பொருள்.

லாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கையுடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயர் லாத்.

லூத்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சமகாலத்தவராக இருந்தார். ஆயினும் வேறு பகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார். இவரது சமுதாயம் பல கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

வஹீ
வஹீ என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பது இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்.

ஷுஐப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் அவரது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.

ஷைத்தான்
இப்லீஸ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஸஃபா, மர்வா
இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக் குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன்முதலில் இப்றாஹீம் நபி தமது மனைவியையும், கைக்குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார். அப்போது குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக்குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (புகாரி : 3364, 3365)

எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இதற்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இருமலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக் குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்ட வெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான்.

ஸகாத்
கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. 87 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பிற்குரிய பணம், வெள்ளி மற்றும் வர்த்தகப் பொருட்கள் வைத்திருப்போர் அதில் கட்டாயமாக இரண்டரை சதவிகிதம் வழங்குவது ஸகாத் எனப்படும்.

குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனம் மற்றும் வீட்டு உயயோகப் பொருட்கள் தவிர மற்ற அனைத்துக்கும் மதிப்பிட்டு இரண்டரை சதவிகிதம் வழங்கியாக வேண்டும். அதுபோல் விளை பொருட்களில் நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவாரியாக விளைபவற்றில் பத்து சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். அழுகும் பொருட்கள் மட்டும் விதிவிலக்குப் பெறும்.
நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள், ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு). இஸ்லாமிய அரசாக இருந்தால் கட்டாயமாக வசூலிக்கப்படும். (9:103)

ஸகாத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன. ஸகாத் குறித்த ஏனைய சட்டங்கள் நபிமொழிகளில் தான் காணக் கிடைக்கிறது. ஸகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது.

ஜகரிய்யா
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம். இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுமுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும்போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்தததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக் கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஜகரிய்யா நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் ஆதாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் இருக்கும் போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும். மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.

ஜக்கூம்
நரகவாசிகளுக்கு உணவாக வழங்கப்படும் மரத்தின் பெயரே ஜக்கூம்.

ஜபூர்
தாவூது நபிக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் ஜபூர் (பார்க்க 4:163, 17:55)

ஸமூத்
ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.

ஸலாம்
சாந்தி, அமைதி, நிம்மதி என்று இச்சொல் பொருள்படும். ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது கூறும் வாழ்த்து இஸ்லாமிய வழக்கில் ஸலாம் எனப்படும்.

ஸஜ்தா - ஸுஜுது
இதன் அகராதிப் பொருள் பணிவு, பணிதல் என்பதாகும். பல இடங்களில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தொழுகையில் உள்ள ஒரு நிலையை இச்சொற்கள் குறிக்கின்றன. அதாவது நெற்றி, மூக்கு, இரண்டு கால் மூட்டுக்கள், இரண்டு உள்ளங்கைகள் ஆகியவை தரையில் படுமாறு இறைவனுக்காக பணிந்து அதில் கூற வேண்டியதைக் கூறுவது தான் ஸஜ்தா எனப்படும். இது தொழுகையின் ஒரு அங்கமாகவும் உள்ளது. தொழுகையில்லாமல் தனியாகவும் செய்யலாம்.

ஸாபியீன்கள்
இறைத்தூதர்கள் அனுப்பப்படாத போதும் அல்லது இறைத்தூதர்கள் வழிகாட்டுநெறி சென்றடையாத போதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்! இவ்வுலகுக்கு ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும். மனிதனால் உருவாக்கப்பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைத்தூதர் வழியாக இல்லாமல் இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொள்வார்கள். மேலும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் போது எவையெல்லாம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்திற்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள். நல்லவை எனத் தெரிபவற்றைக் கடைபிடிப்பார்கள்.

வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள். நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைக் கூறிய போது அவர்களையும் ஸாபியீன்கள் என்று குறிப்பிட்டனர். (பார்க்க புகாரி : 344) யாராவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர் ஸாபியீன்களில் சேர்ந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர். (பார்க்க புகாரி : 3522)
இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் குற்றவாளிகளே.

ஸாமிரி
இவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். மூஸா நபியவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று தூர் மலைக்குச் சென்ற போது நகைகளை உருக்கி காளைக்கன்றின் சிற்பத்தை உருவாக்கினான். இதுதான் இறைவன் எனக் கூறி மூஸா நபியின் சமுதாயத்தை வழிகெடுத்தான்.

ஸாலிஹ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். வலிமைமிக்க ஸமூத் எனும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா
ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். இம்மரத்தின் ஒவ்வொரு இலையும் யானையின் காதுபோல் பெரிதாக இருக்கும். இம்மரத்தின் பலவிதமான வர்ணங்கள் கண்ணைப் பறித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். புகாரி: 349, 3207, 3342, 3887)

ஸுந்துஸ்
ஸுந்துஸ் என்பது சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடையின் பெயராகும்.

ஸுலைமான்
ஸுலைமான் அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூத் (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி எனலாம். யூத, கிருத்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.

ஸூர்
ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும். இறைவன் தன் வசமுள்ள ஸூர் மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் ஊதப்படும்போது என்ற சொல் குறிப்பிடுகின்றது

ஜைது
இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் எடுத்து வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகனாவார். இஸ்லாத்தில் வளர்ப்பு மகன் இல்லை என்ற கட்டளை வருவதற்கு முன் நபிகள் நாயகத்தின் மகன் என்று இவர் குறிப்பிடப்பட்டார். திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே நபித்தோழர் இவர் மட்டுமே.

ஜாலூத்
கொடுங்கோன்மை புரிந்த ஒரு மன்னனின் பெயரே ஜாலூத். இவனைப் போர்க்களத்தில் தாவூத் நபி அவர்கள் கொன்றார்கள்.

ஜிப்ரீல்
ரூஹு என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஜின்
ஜின்என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப்போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகம் அடைவார்கள்.

ஹஜ்
முஸ்லிம்களில் சக்தி பெற்றவர்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமைகளில் ஹஜ் ஒன்றாகும். குறிப்பிட்ட நாட்களில் தான் இதை நிறைவேற்ற வேண்டும். மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல், அரஃபா, முஸ்தலிபா, மினா ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தல் ஹஜ் எனப்படும்.

ஹாமான்
இவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனுக்கு அமைச்சராக இருந்தான். இவனைப் பற்றி அதிக விபரம் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை.

ஹாரூத், மாரூத்
இவ்விருவரும் நபிகள் நாயகத்திற்கு முந்தைய சமுதாயத்தில் சூனியம் எனும் வித்தையைக் கற்றுக் கொடுத்த தீயவர்களாவர். இவ்விருவரும் வானவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்களது நடவடிக்கைகள் வானவர்களின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் இவ்விருவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே சரியான கருத்தாகும்.

ஹாரூன்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரும் மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டாத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.

ஹிஜ்ரத்
ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்;லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு ஊரில், ஒரு நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தின் படி வாழ முடியாத நிலை ஏற்பட்டால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைபிடித்து ஒழுக ஏற்ற இடத்துக்குச் செல்வது தான் ஹிஜ்ரத் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் முஸ்லிம்கள் இந்த நிலையைச் சந்தித்த போது அபீஸீனியாவுக்குச் சிலர் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) மேற்கொண்டனர். வேறு சிலர் மதீனா நகருக்குச் சென்றார். அவர்கள் ஹிஜ்ரத் செய்ததிலிருந்து முஸ்லிம் ஆண்டு ஹிஜ்ரா ஆரம்பமாகிறது. ஹிஜ்ரி முதல் ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53ம் வயது என்பது பொருள். 53ம் வயதில்தான் நபிகள் நாயகம் (ஸல்) தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

ஹுது ஹுது
இது ஒரு பறவையின் பெயராகும். ஸுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு ராணியைப் பற்றி உளவறிந்து ஸுலைமான் நபிக்கு இப்பறவை தெரிவித்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஹுது
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இறைவன் படைப்புகளிலேயே நிகரற்றவர்களாக கருதப்படும் ஆது சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஹூருல் ஈன்
சொர்க்கவாசிகள் வாழ்க்கைத் துணைவியர் ஹூருல் ஈன் எனப்படுவர்.
அஃராஃப் வாசிகள்:
அஃராஃப் என்றால் "தடுப்புச் சுவர்கள்" என்பது பொருள்.மறுமையில் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தடுப்பு ச்சுவர்கள் இருக்கும்.அவற்றின் மேல் நன்மைகளும், தீமைகளும் சம அளவில் உள்ள மக்கள் இருப்பார்கள்.அவர்களே "அஃராஃப் வாசிகள்" எனப்படுகின்றனர். இந்தக் குறிப்பை முன்னிட்டே திருக்குர்-ஆனின் ஏழாவது அத்தியாயத்திற்கு "அல்அஃராஃப்" அத்தியாயம் எனப்படுகிறது

மஜீசிகள்
நெருப்பை வழிப்பட்ட பண்டைய பாரசீகப் புரோகிதர்களில் ஒருவரான 'மின்ஜ்கூஷ்' என்பவரே 'மஜீஸ் ஆவார். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் "மஜீசிகள்" என்றழைக்கப்பட்டனர்.

அகபா உடன்படிக்கை
மக்கா செல்லும் பாதையில் 'மினா'வுக்கு அருகிலுள்ள ஓர் இடத்தின் பெயர் 'அகபா' ஆகும். மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்னர் மதீனாவாசிகளில் சிலர் இடத்தில் இரண்டு கட்டங்களில் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கிய உறுதிமொழியையே 'பைஅத்துல் அகபா' (அகபா உடன்படிக்கை அல்லது அகபா உறுதிப் பிரமாணம் என்பர். அவ்வாறு உறுதிமொழி வழங்கிய நாள் 'அகபா நாள்' எனப்படுகிறது.

அபிசீனியா
எத்தியோப்பியாவின் பழைய பெயர். கிழக்கு ஆப்ரிக்காவில் செங்கலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு. சூடான்,கென்யா,சோமாலியா போன்ற நாடுகளுக்கு மத்தியில் அது உள்ளது.

அபூ &உம்மு
இன்னாரின் தந்தை என்று ஒருவரைக் குறிப்பால் உணர்த்த, அல்லது அவரைக் கண்ணியப்படுத்த அவருடைய புதல்வர் அல்லது புதல்வியின் பெயருக்கு முன்பு 'அபூ' எனும் சொல்லைச் சேர்த்துக் குறிப்பிடுவது அரபியரின் வழக்கம் (உ-ம்) அபூ அப்தில்லாஹ்- அப்துல்லாஹ்வின் தந்தை. இதைப்போன்ற உம்மு (தாய்) இப்னு (புதல்வர்) இப்னத் அல்லது பின்த் (புதல்வி) ஆகிய வார்த்தைகளில் ஒன்றைச் சேர்த்துக் குறிப்பிடுவதும் உண்டு. (உ-ம்) உம்மு ஹபிபா- ஹபிபாவின் தாயார். இப்னு உமர்-உமரின் புதல்வர், இப்னத்து ரசூலில்லாஹ்-ரசூலில்லாஹ்வின் புதல்வியார், பின்த் அபுபக்ர்-அபுபக்கரின் புதல்வி என்பன ஆகும்


அரஃபா நாள்
புனித மக்காவிற்குக் கிழக்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளியின் பெயர் 'அரஃபா' ஆகும்.ஹஜ் செய்ய ச்செல்பவர்கள் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் இங்கு தங்குவது கட்டாயக் கடமையாகும்.அந்த நாளே 'அரஃபா நாள்' (யவ்மு அரஃபா அல்லது யவ்முல் வக்ஃபா) எனப்படுகிறது

அல் ஃபாத்திஹா
திருக்குர்-ஆனின் முதலாவது அத்தியாயத்தின் பெயர். தோற்றுவாய், துவக்கம், ஆரம்பம் ஆகிய பொருள்கள் இதற்கு உண்டு. இவ்வத்தியாயம் திருக்குர்-ஆனின் தொடக்கத்தில் இடம்பெற்றிருப்பதாலும் தொழுகைகளில் இதுவே ஆரம்பமாக ஓதப்படுவதாலும் இதற்கு இப்பெயர் வாய்த்திருக்கலாம்

அல்லாஹ்
இறைவன்,கடவுள். அரபிமொழியில் ஒரே இறைவனைக் குறிக்கும் சொல்.வணக்கத்திற்கும் வழிப்பாட்டிற்கும் உரிய ஒரே இறை என்பதே இதற்குப் பொருள்.மாறாக அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் கடவுள் என்று நினைப்பது தவறானதாகும்.

அலை
அலைஹிவஸ் ஸலம் என்பதின் சுருக்கம் ஆகும். இதற்கு அவர் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதே பொருளாகும்.பொதுவாக "இறைத்தூதர்களுக்குப் பிரார்த்தனை செய்யும் வகையில் அவர்களின் பெயருக்கு பின்னால் (அலை) என்று சுருக்கமாகக் குறிப்பிடுவர்.

அவ்ஸ்
மதீனா நகரில் வாழ்ந்துவந்த இரு பெரும் குலத்தாரில் ஒரு குலத்தார். (மற்றொரு குலத்தார் கஸ்ரஜ்) முன்னொரு காலத்தில் யமனில் வசித்து வந்த இவ்விரு குலத்தாரும் 'மஃரிப்' நீர்த் தேக்கத்தில் கி.பி. 542-570 வாக்கில் உடைப்பு ஏற்பட்டபோது அங்கிருந்து வந்து மதீனாவில் குடியேறியவர்களாவார்கள்.

அய்யாமுத் தஷ்ரீக்
இறைச்சியைக் காயவைக்கும் நாட்கள் என்பது இதன் சொற்பொருளாகும் ஹிஜ்ரீ ஆண்டின் பன்னிரெண்டாவது மாதமான துல்ஹஜ் மாதம் 11,12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்கள் இஃது அழைக்கப்படுகிறது.

அய்யாமுல் ஜாஹிலிய்யா
இஸ்லாத்தின் தொடர்ச்சிக்கு முந்தைய இருண்ட காலம்.ஓரிறை அறிவும் மார்க்க நெறிகளும் இல்லாத, குலமாச்சரியங்கள் கோலோச்சிய அன்றைய கலாசாரத்திற்கும் 'ஜாஹிலிய்யா' எனப்படுவதுண்டு.சுருக்கமாக நபிகள்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வாழ்ந்த அத்தகைய அரசு சமுகத்தின் நிலையே அய்யாமுல் ஜாஹிலிய்யா ஆகும்.

அன்சாரிகள்
'
அன்சார்' என்பதற்கு உதவியாளர்கள் என்பது சொற்பொருளாகும்.நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த மதீனத்து முஸ்லிம்களை இப்பதம் குறிக்கும்.தமது பிறந்தகமான மக்காவை துறந்து வந்த முஸ்லிம்களுக்கும் ஏனைய இடங்களிலிருந்து வந்த மக்களுக்கும் அனைத்து விதங்களிலும் மதீனாவாசிகள் ஆதாரவளித்தால் மதீனா முஸ்லிம்களுக்கு இப்பெயர் வரலாயிற்று. இவர்களே ஆரம்பக்கால அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தார்கள்

அஸ்ர்
பிற்பகலின் நடுப்பகுதியிலிருந்து சூரியன் மறையும் வரையுள்ள நேரத்திற்கே 'அஸ்ர்' எனப்படுகிறது. இந்நேரத்தில் நிறைவேற்றப்படும் கடமையான தொழுகைக்கே 'அஸ்ருத் தொழுகை' ஆகும்

ஆத்
கி.மு. 2538 ஆம் ஆண்டுவாக்கில் வாழ்ந்த அரபுப் பழங்குடியினர் அவர்கள் தென் அரெபியாவில் வசித்து வந்தனர்.அதன் எல்லை கிழக்கே பாரசீக வளைகுடாவின் வடக்கிலிருந்து மேற்கே செங்கடலின் தெற்குவரை விரிந்திருக்கிறது.இன்றைய யமன் (ஓமன்) நாடு இதில் அடங்கும். ஆத் சமுகத்தாரின் பரம்பரை நபி நூஹ்(அலை) அவர்களுடன் இணைகிறது. ஆத் பின் இரம் பின் சாம் பின் நூஹ் என்பதே அந்தப் பரம்பரையாகும்.

ஆஷீரா
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் அன்று நோற்கப்படும் நோன்பிற்கு ஆஷீரா நோன்பு என்பர்

ஆஸர்
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய தந்தையின் பெயர்.இவர் கி,மு. 2230 ஆண்டுவாக்கில் வாழ்ந்தார்.அன்றைய பாபில் அல்லது கல்தான் (இன்றைய இராக்) நாட்டு மன்னன் நம்ரூத் (Nimrod) உடைய படையில் ஒரு உயர் அதிகாரியாக ஆஸர் இருந்தார்.அத்துடன் சிலை வழிபாடு குடும்பத்தைச் சேர்ந்தவராகவும்,ஆழமான ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்.

இப்ராஹீம் (அலை)
அன்றைய 'பாபில்' அல்லது 'கல்தான்' (இன்றைய தென் இராக்) நாட்டில் உற் எனும் ஊரில் கி.மு.2160ல் பிறந்த ஓர் இறைத்தூதர், இறைவனின் உற்ற தோழர் (கலீலுல்லாஹ்) எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள். ஓரிறைக் கொள்கைக்காக எல்லா தியாகங்களையும் மேற்கொண்டார்கள்.இறைத்தூதர்களான இஸ்மாயீல் (அலை) இஸ்ஹாக்(அலை) ஆகியோரின் தந்தை ஆவார்கள்.பைபிளில் ஆபிரகாம் என கூறப்படுகிறது

இப்லீஸ்
சைத்தான்களின் தந்தைக்கு பெயர். இவன் நெருப்பால் படைக்கப்பட்டவன். ஜின் இனத்தை ச்சேர்ந்தவனானை இவனுக்கு ச்சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

இமாம்
தலைவர், முதன்மை பொறுப்பு வகிப்பவர், கூட்டுத் தொழுகையை முன்நின்று நடத்துபவர், வழிக்காட்டி, முன்னோடி, பாதை ஆகிய பொருள்களும் இதற்கு உண்டு. சான்றோரைக் குறிப்பிடும்போது அவர்களது பெயருக்கு முன்னால் இச்சொல் குறிப்பிடப்படுவது உண்டு (உம்) இமாம் புஹாரீ(ரஹ், இமாம் இப்னு கஸீர் (ரஹ்)

இன்ஜீல்
கிரேக்க மொழி ச்சொல்லான இதற்கு 'நற்செய்தி' என்பது பொருள். இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளிய வேதமே 'இன்ஜீல்' ஆகும். இன்று இது 'பைபிள்-புதிய ஏற்பாடு' என்ற பெயரில் அறியப்பட்டாலும் அருளப்பட்ட அதே நிலையில் இப்போது அது இல்லை.

இன்ஷா அல்லாஹ்
"
அல்லாஹ் நாடினால்" என்பதற்கு இதற்கு பொருள்.வருங்காலத்தில் ஒன்றை ச்செய்யப்போவதாக வாக்களிக்கும் இறை நம்பிக்கையாளர் இதையும் சேர்த்தே குறிப்பிடுவார் (உம்) இன்ஷா அல்லாஹ் நாளை வருகிறேன்.

இஷா
சூரியன் மறைந்து செவ்வானமும் மறைந்த பின்னர் வரும் நேரம். இந்நேரத்திலிருந்து ஃபஜர் (வைகறை) உதயமாகும் வரையுள்ள நேரத்தில் நிறைவேற்றப்படும் கடமையான தொழுகையே 'இஷா தொழுகை' ஆகும்.

இஸ்மாயீல் (அலை)
(இஸ்மவேல்- கி.மு 2070-1933). கி.மு 19 ம் நூற்றாண்டை ச்சேர்ந்த இறைத்தூதரான இவர்கள்.நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அவர்களுடைய இளைய துணைவியார் 'ஹாஜர்' (ஆகார்) மூலம் பிறந்த புதல்வர் ஆவார்.இவரிடமிருந்தே அரபு சந்ததிகள் தோன்றியதால், இஸ்மாயீல் (அலை) அவர்களை "அரபியரின் தந்தை" என்று குறிப்பிடுவர். இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய வழித்தோன்றல் ஆவார்கள்

இஸ்ரவேலர்கள்
இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (பனூ இஸ்ராயீல்) இறைத்தூதர் யகூப் (அலை) (Jacob) அவர்களுக்கு 'இஸ்ராயீல்' என்ற பெயருண்டு. அவர்களின் வழித்தோன்றல்தான் இஸ்ரவேலர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு 'அஹ்லுல் கிதாப்' (வேதக்காரர்கள் அல்லது வேதம் வழங்கப் பெற்றோர்) என்றோரு பெயரும் உண்டு. கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் ஒரே இனத்தாராய் இருந்த இவர்கள். பிறகு யூதர்கள் என்றும் கிறித்தவர்கள் என்றும் பிரிந்து விட்டனர்.

இஸ்லாம்
சாந்தியளித்தல், கீழ்ப்படிதல், அடிபணிதல், ஒப்படைத்தல், இறைவனை மட்டுமே வழிபடுதல் என்பன இதன் பொருளாகும்.பொதுவாக ஓர் இறைத்தூதர் எடுத்துரைத்த மார்க்கத்தை ஏற்று, அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே "இஸ்லாம்" ஆகும். அதைக் கடைப்பிடிப்பவருக்கு 'முஸ்லிம்' என்பர்.ஆதி இறைத்தூதர் முதல் இறுதி இறைத்தூதர் வரை அனைவரும் "இஸ்லாமை"யே போதித்தனர்.

இஸ்ஹாக் (அலை)
(ஈசாக்- கி.மு.2060-1880) நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அவர்களுடைய மூத்த துணைவியார் சாரா (சாராள்) அம்மையார் மூலம் பிறந்த புதல்வர்.இவர்களும் ஓர் இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களின் மகனே நபி யகூப் (அலை). ஆகவே தான் இஸ்ஹாக்கை 'இஸ்ரவேலர்களின் தந்தை' என அழைக்கப்படுகிறார்கள்

ஈசா (அலை)
இயேசு (Jesus) இறைத்தூதர்களில் ஒருவரான இவர்கள் கி.மு. 4ம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள நாசிரா (Nazareth) எனும் ஊரில் பிறந்தார்கள்.இவர்களுக்கு 'இன்ஜீல்' எனும் இறைவேதம் அருளப்பெற்றது. மர்யம் (அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்த ஈசா (அலை) அவர்கள் உயிரோடு வானுக்கு உயர்த்தப்பட்டார்கள்.இறுதிக் காலத்தில் பூமிக்கு வந்து வாழ்ந்து பின்னர் மரணிப்பார்கள்.

உம்ரா
நாடுதல், சந்தித்தல், வழிபடுதல் என்பன இதன் சொற்பொருளாகும். புனித கஅபாவை தரிசித்து இறைவனை வழிபடும் ஒரு வகை வழிபாடு. 'உம்ரா' ஆகும். ஹஜ் எனும் வழிப்பாட்டிற்குக் குறிப்பிட்ட காலம் உண்டு. உம்ராவிற்கு கால நிர்ணயம் இல்லை.

உமையாக்கள்
பனூ உமய்யா குலத்தை ச்சேர்ந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்கள். இவர்களின் ஆட்சி ஹிஜ்ரீ 40ஆம் ஆண்டு முதல் 132ஆம் ஆண்டு வரை (கி.பி. 661-750) நீடித்தது. உமய்யா ஆட்சியாளர்களில் முதலாமவர் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி). அவர்களில் இறுதியானவர் இரண்டாம் மர்வான் (ரஹ்)

உஸ்ஸா
அறியாமைக் காலத்தில் குறைஷியர் வழிப்பட்டுவந்த சிலையின் பெயர். இது 'லாத்' மற்றும் 'மனாத்' ஆகிய சிலைகளுக்கு அருகில் கஅபாவில் வைக்கப்பட்டிருந்தது. மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் அந்த ச்சிலையை அகற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட காலித் பின் அல்வலீத் (ரலி) அதை அகற்றினார்கள்.

உஸைர்
(
எஸ்ரா) கி.மு. 487 வாக்கில் யூதர்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர் ஒருவரின் பெயர். இவர் ஓர் இறைத்தூதாரா என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு உள்ளது. புக்த்தநஸ்ஸர் (நெபுகாட்நேஸர்- கி.மு 561) ஜெருசலத்தைக் கைப்பற்றி (கி.மு 568) அழித்தப்பின், தவ்ராத் (தோரா) வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.அப்போது உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் யூதர்கள் உஸைரை நபி மூஸா (அலை) அவர்களுக்கு இணையானவராகக் கருதினார்கள்.சிலர் எல்லை மீறி, உஸைர் கர்த்தரின் குமாரர் என்றே புகழ்ந்தனர்.

ஊக்கியா
119 (
அல்லது 112) கிராம் எடை கொண்ட அக்கால அரேபியரின் பழைய அளவையின் பெயர்

ஃகரீப்
நபிமொழிகளில் (ஹதீஸ்) ஒரு வகை. ஒரு நபிமொழியின் அறிவிப்பாளர்தொடரில் பலர் இடம்பெறாமல் ஒருவர் மட்டும் இடம் பெற்றுள்ள ஹதீஸிற்கே ஃகரீப் என்று பெயர்.இதற்கு 'தனித்தவர்'. 'அறிமுகமற்றவர்' என்பன சொற்பொருளாகும்.

ஃகனிமத்
சம்பாத்தியம் என்பது இதன் பொருளாகும். போர்ச்செல்வத்தையும் போரில் எதிரிப் படையினர் விட்டுச்சென்ற பொருளையும் இது குறிக்கும். இதில் போரிட்டோருக்கு ஐந்தில் நான்கு பாகங்களும் இறைத்தூதருக்கு மீதியுள்ள ஒரு பாகமும் உரியன.

கஃபன்
பிரேத ஆடை. இறந்து போனவர்களை அடக்கம் செய்யும்போது அவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடை

காதியானீ
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான கொள்கைப் பிரிவினர். இன்றைய பாகிஸ்தானில் அடங்கிய பஞ்சாபிலுள்ள ஓர் ஊரின் பெயர் காதியான். இந்த ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானீ (1839-1908) என்பவன் தனனை 'நபி' என்று வாதிட்டான். இவனைப் பின்பற்றியவர்கள் காதியானீகள் எனப்பட்டனர். அஹ்மதிய்யாக்கள் என்றும் இவர்களுக்கு வேறு பெயர் உண்டு

கிஸ்ரா
குஸ்ரூ (Chosroes) பாரசீகப் பேரரசர்களின் புனை பெயர். நபியவர்களின் காலத்தில் இருந்த குஸ்ரூவின் பெயர் அப்ரோயஸ் பின் ஹீர்முஸ் (கி.பி. 590-628) இவரோடு இராக்கில் பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்தது.

கீராத்
அரபியர் பயன்படுத்திய 213 மில்லி கிராம் எடை கொண்ட ஒரு பழைய அளவையின் பெயர். அதே வேளையில் ஒரு மலையளவுள்ள பெரும் எடைக்கும் 'கீராத்' எனப்படுவதுண்டு.

கைஸர்
சீசர் (Caesar) கிழக்கு ரோமானியப் பேரரசர்களின் புனை பெயர். நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த சீசரின் இயற்பெயர் ஹிரக்ளீயஸ் (Heraclius கி.பி. 610-641) இவரோடு ரோமப் பைஸாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.

கைபர்
மதீனாவிலிருந்து ஷாம் (சிரியா) நாட்டிற்கு ச்செல்லும் வழியில் அமைந்துள்ள பெரிய நகரம். ஹிஜ்ரி ஏழாவது ஆண்டில் (கி.பி. 628) இறை நம்பிக்கையாளர்களுக்கும், யூத இணைவைப்பாளர்களுக்கும் இடையே இங்கு நடந்த சண்டையே 'கைபர் போர்' எனப்படுகிறது

சஜ்தா
சுஜீத், சிர வணக்கம். தொழுகையில் நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகிய உறுப்புகள் தரையில் படும்படி செய்யப்படும் சிரவணக்கம் இது. இறைவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

சுப்ஹீ
வைகறையில் சூரிய உதயத்திற்கு முன்னுள்ள நேரம். இந்நேரத்தில் நிறைவேற்றப்படும் தொழுகைக்கே 'சுப்ஹீ தொழுகை' என்றும் ஃபஜர் தொழுகை (வைகறை தொழுகை) என்றும் கூறுவர்.

தபூக்
மதீனாவுக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். ஹிஜ்ரீ 9 ஆவது ஆண்டு ரஜப் மாதத்தில் முஸ்லிம்களுக்கும் கிழக்கு ரோமானியர்களுக்கும் இடையே இங்கு நடைபெற்ற போர் 'தபூக் போர்' எனப்படுகிறது.

தயம்மும்
'
நாடுதல்' என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கில் அங்கத்தூய்மைக்கு (உளூ) மாற்றமான ஒரு தூய்மை முறை. உளூ செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நேரத்திலும், நோய் போன்றவற்றால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நேரங்களிலும் சுத்தமான மண்ணில் கைகளைப் பதித்து, உதறி, அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு உட்பட்டு முகத்திலும் கைகளிலும் தடவிக்கொள்ளும் முறை.

தவ்ராத்
தோரா, இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கு (Moses) இறைவன் அருளிய வேதம். இது விவிலியம் பழைய ஏற்பாடு (Old Testamant) என்று கருதப்படுகிறது. ஆனால்,அருளப்பெற்ற அதே நிலையில் தற்போது அது இல்லை.

தஜ்ஜால்
அந்தி கிறிஸ்து (Anti Crist) உலக அழிவுக்குமுன் மத்திய கிழக்கு ஆசியாவில் யூதர்களிடையே தோன்றவிருக்கும், கண்கட்டு வித்தைகளில் கைதேர்ந்த மகா பொய்யன், ஒற்றைக் கண்ணுடையவன். இவனை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் அழிப்பார்கள். குழப்பவாதியான இவனை 'மசீஹீத் தஜ்ஜால்' என்பர்.

தாபிஉ
பின்தொடர்ந்தவர் என்பது இதன் சொற்பொருள், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த முஸ்லிம்கள். நபித்தோழர்களை ச்சந்தித்தவர். தாபிஊன் (தாபிஉகள்) என்பது பன்மை. முஸ்லிம் ஒருவர் நபி (ஸல்) அவர்களை சந்தித்திருக்காவிடில் அவர்கள் நபியவர்களது காலத்தில் வாழ்ந்தவராயினும் அவர் தாபிஉகளில் ஒருவராகவே கருதப்படுவார்.

தாயிஃப்
புனித மக்காவுக்குத் தென்கிழக்கே 113 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இயற்கையழகு கொஞ்சும் ஒரு மலை நகரம். கோடை வாசஸ்தலம்.

திர்ஹம்
இது 3.06 (அல்லது 2.975) கிராம் எடையளவுள்ள அக்கால வெள்ளி நாணயம்.

தீனார்
4,374
கிராம் எடையளவுள்ள அக்கால தங்க நாணயம்

துல்கஅதா
இஸ்லாமிய ஆண்டின் பதினொன்றாவது மாதம்.

துல்ஹஜ், துல்ஹிஜ்ஜா
இஸ்லாமிய ஆண்டின் பன்னிரன்டாவது மாதம்.

தூர்
மலை என்பது சொற்பொருள். எகிப்திலுள்ள சினாய் மலையை இச்சொல் குறிக்கும். இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் நின்று இறைவனுடன் உரையாடிய மலையின் பெயர் (தூர் சீனாஉ அல்லது தூர் சினாய்)

நபிமொழி
ஹதீஸ் (Prophetic tradition) நபி (ஸல்) அவர்களின் சொல், செயல். அங்கிகாரம் போன்றவையே ஹதீஸ் எனப்படும்.

நம்ரூத்
Nimrod.
அக்கால பாபிலோன் (இராக்) அரசனின் பெயரே நம்ரூத் பின் கன்ஆன் என்பதாகும். உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் ஆட்சி புரிந்த நால்வரில் நம்ரூதும் ஒருவன் என கூறப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு கடும் துயரங்களைக் கொடுத்து வந்த இந்த சர்வாதிகாரியிடமிருந்து இறைவன் அவர்களை காப்பாற்றினான்.

நஜாஷி
நீகஸ் (Negus) அபீசீனிய நாட்டு மன்னர்களின் புனைபெயர். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நஜாஷீயின் இயற்பெயர் அஸ்ஹமா. அவர் நபியவர்களை நம்பிக்கை கொண்டதுடன் மக்கா நகர முஸ்லிம்களுக்கு இக்கட்டான காலத்தில் ஆதரவும் நல்கினார். ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு இறந்தார்.

நூஹ் (அலை)
நோவா. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் முன்னோர்களில் தோன்றிய முக்கிய இறைத்தூதர். இவரது ஊர் இராக், டைக்ரிஸ், யூப்ரடிஸ் நதிக் கரைகளை ஒட்டியே அவர்கள் வாழ்ந்துள்ளார்கள். நபி ஆதம் (அலை) அவர்களுக்குப் பின் வந்த அவர்கள் 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அவர்களது காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தை இன்றும் வரலாறு பேசும்.


ஃபிர்அவ்ன்
பார்வோன் (Pharaoh) அமாலிக்கா (அமலேக்கிய) அரசப் பரம்பரையில் வந்த 11வது எகிப்து நாட்டு அரசனின் புனைபெயர். இறைத்தூதர் மூசா (அலை) அவர்களது காலத்தில் சர்வாதிகாரியாக இருந்த ஃபிர்அவ்னின் இயற்பெயர் வலீத் பின் முஸ்அப் அர்ரய்யான் என்பதாகும். கிப்தீ (Coptic) குலத்தில் பிறந்த இவன் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவந்தான். வரலாற்றாசிரியர்கள் இவனை இரண்டாம் ரம்சேஸ் (Ramses II) என்று குறிப்பிடுகின்றனர். இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கும் அவர் சமுகத்திற்கும் எதிராக செயல்பட்ட இவன் இறை ஆணையால் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டான். எகிப்திலுள்ள ராயல் அருங்காட்சியகத்தில் இன்றளவும் இவனுடைய உடல் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஃபிர்தெளஸ்
நல்ல மனிதர்களுக்கு மறுமையில் இறைப்புறத்திலிருந்து வழங்கப்படும் உயர் தரமான சொர்க்கத்திற்கு 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்' என்று பெயர்.

பத்ரு
மக்காவுக்கும், மதீனாவிற்கும் இடையே உள்ள ஓர் இடம். மதீனாவுக்குத் தென்மேற்கே 147 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்தில் மக்கா இறைமறுப்பாளர்களுக்கும் மதீனா முஸ்லிம்களுக்கும் இடையே ஹிஜ்ரீ 2 (கி.பி 624) ரமளான் திங்கள் 17ஆவது நாள் வெள்ளிக்கிழமை நடந்த வரலாற்று ச்சிறப்பு மிக்க போரே 'பத்ருப் போர்' எனப்படுகிறது.

பனூ
மகன்கள். ஒருவருக்குப் பிறந்த பிள்ளைகள் மூலம் தழைத்த ஒரு குலத்தை அவருடைய பெயரால் அழைக்கும்போது இச்சொல் ஆளப்படும் (உம்) பனூ ஹாஷிம், பனூ முத்தலிப். ஹாஷிம் குலத்தார், முத்தலிப் குலத்தார்.

பாங்கு
தொழுகைக்கு விடுக்கப்படும் அறிவிப்பே பாரசீகத்தில் பாங்கு அல்லது அரபியில் அதான் ஆகும். தொழுகைக்கு அறிவிப்பு கொடுப்பவர் 'முஅத்தின்' எனப்படுவர். பாங்கு என்றால் ஒலி எனப்படும். எனவே தான் தமிழில் அதனை பாங்கொலி என்கிறார்கள்.

மஃக்ரிப்
சூரியன் மறைதல், மேற்குத்திசை என்பன இதன் சொற்பொருளாகும். சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரையுள்ள நேரத்திற்குள் தொழவேண்டிய கடமையான தொழுகைக்கு மஃக்ரிப் தொழுகை என்று பெயர்.

மத்யன்
மீதியான் .செங்கடலின் கரையில் வடமேற்கு சௌதியில் உள்ள ஒரு மலைப்பிரதேசம் இதன் வடக்கே ஜோர்டான் உள்ளது. இந்த மத்யன் பகுதி மக்களை நல்வழிப்படுத்தவே ஷீஜப் (அலை) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

மர்யம்
அன்னை மேரி. இம்ரான்- ஹன்னா தம்பதியினரின் மகளான இவர்கள், ஆண் துணையின்றி அற்புதமான முறையில் ஈசா (அலை) அவரளைப் பெற்றடுத்த கன்னித்தாய் ஆவார்கள். இறுதிவரை மணமுடித்துக்கொள்ளாத அன்னை மர்யம் (அலை) அவர்களை இறைத்தூதர் ஸகரிய்யா (அலை) அவர்களே வளர்த்தார்கள்.

மஸ்ஜித்
பள்ளிவாசல். சிரவணக்கம் செய்யுமிடம் என்பது இதன் சொற்பொருள்.இதன் பன்மை மஸாஜித்

மஸ்ஜிதுந் நபவீ
மதினாவில் அமைந்துள்ள பள்ளிவாசல். நபியின் பள்ளிவாசல் என்பது இதன் பொருள். உலகின் இரண்டாவது புனிதப் பள்ளிவாசல் ஆகும்.

மஸ்ஜிதுல் ஹராம்
ஆதி ஆலயமான கஅபாவை உள்ளடக்கிய பள்ளிவாசலை மஸ்ஜிதுல் ஹராம் (புனித பள்ளிவாசல்) என்று கூறுவர். இது முதலாவது புனித பள்ளிவாசல் ஆகும்.

மினா
சவுதி அரேபியாவில் புனித மக்காவிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியின் பெயர். மக்காவுக்கும் அரஃபாவுக்கும் இடையே அதாவது மக்காவிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும் அரஃபாவிலிருந்து சுமார் 17 கி.மீ தூரத்திலும் உள்ளது. ஹஜ் செய்யும் காலத்தில் (துல்ஹஜ் மாதம் 11 12 13 ஆகிய) மூன்று நாட்கள் இங்கு தங்கியிருந்து சைத்தானுக்கு அடையாளமாக நிறுவப்பட்டுள்ள தூண்களில் கல்லெறிய வேண்டும். அத்தகைய நாட்களை 'அய்யாமு மினா' (மினாவின் நாட்கள்) என்பர்.

மீக்காயீல்
Angel Michael.
முக்கியமான வானவர்களில் ஒருவர். குர்-ஆனில் குறிப்பிடப்படும் ஒருசில வானவர்களில் இவரும் ஒருவர்.

முசைலிமா
சவுதி அரேபியாவில் 'நஜ்த்' நகரின் அருகே யமாமா என்ற ஊரில் பனூ ஹனீஃபா குலத்தை சார்ந்த ஒருவனின் பெயர் தான் முசைலிமா. இவன் நபி (ஸல்) அவர்களது காலத்தில் தன்னை நபி என பொய்யாக வாதிட்டான். இதனால் அவன் முசைலிமா அல் கத்தாப் (மகா பொய்யன் முசைலிமா) என்றே அழைக்கப்பட்டான். அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்தில் இவனுக்கு எதிராக படையெடுத்து ஹிஜ்ரீ 12 ஆம் ஆண்டில் (கி.பி. 633 ல்) நடைபெற்ற போரில் இவன் கொல்லப்பட்டான். அப்போரே யமாமா போர் எனப்படும்.

முஸ்லிம்
சாந்தியளிப்பவர். கீழ்ப்படிகின்றவர் என்பது இதன் பொருள். ஏக இறை நம்பிக்கைக் கொண்டு இறைச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிகின்றவர். இறைவழிபாடுகளைகளை சரிவர செய்து வருகின்றவர்.

முஹம்மது (ஸல்)
இறுதி இறைத்தூதரின் பெயர். 'புகழப்பட்டவர்' என்பது இதன் பொருள். இவர்கள் கி.பி 570 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் பிறந்து கி.பி. 632 ஆவது ஆண்டு மதீனாவில் மறைந்தார்கள்.

முஹர்ரம்
இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதம்.

முஹாஜிர்
துறந்தவர் என்பது இதன் சொற்பொருள். இஸ்லாமிய வரலாற்றில் மக்கா நகரைத் துறந்து மதீனாவிற்கு ச்சென்ற முஸ்லிம் அகதிகளை 'முஹாஜிர்கள்' என்பர்.

மூசா (அலை)
மோசே (Moses) இறைத்தூதர் யாகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்கள் குடும்பத்தில் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் எகிப்தில் பிறந்த ஓர் இறைத்தூதர். கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ் (ஃபிர்அவ்ன்) கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ரவேலர்களை அவனிடமிருந்து மீட்டார்கள். இவர்களுக்கு இறைவன் "தவ்ராத்" (தோரா) எனும் வேதத்தை அருளினான்.

யாகூப் (அலை)
யாக்கோபு (Jocob கி.மு.2000 -1850) இவர்கள் நபி இஸ்ஹாக் அவர்களின் புதல்வரும் இறைத்தூதர்களில் ஒருவரும் ஆவார். அவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர். இந்தப் பன்னிருவரின் வழித்தோன்றல்களே இஸ்ரவேலர்கள் ஆவர். யாகூப் (அலை) அவர்களின் மற்றறொரு பெயரே இஸ்ராயீல் என்பதாகும்.அதனால் தான் இஸ்ரவேலர்களை பனூ இஸ்ராயீல் என்பர். யாகூப் (அலை) அவர்களிலிருந்து தான் இஸ்ரவேல் நபிமார்கள் நபி ஈசா (அலை) அவர்கள் வரை அனைவரும் தோன்றினர்,

யூசுஃப் (அலை)
யோசேப்பு ( Joseph கி.மு 1910 -1800 ) நபி யாகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்களும் ஓர் இறைத்தூதர் ஆவார்கள். லெபனானில் கன்ஆனில் பிறந்த இவர்கள் பேரழகுக்கும் அழகிய வரலாற்றுக்கும் சொந்தக்காரர்கள். நபிமார்கள் பரம்பரையில் பிறந்த பெருமைக்குரிய இவர்கள் ஒரு நிலையில் எகிப்தின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்கள்.

யூதர்கள்
யஹூத் (Jews) இறைத்தூதர் யாகூப் (அலை) அவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர். இந்த பன்னிருவரின் வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்கள் கிறிஸ்துவின் பிறப்புக்கு பின் இரு பிரிவினராக பிர்ந்து விட்டனர். அவர்களின் ஒரு பிரிவினரே யூதர்கள் ஆவர். இன்னொரு பிரிவினர் கிறித்துவர்கள் (நஸாரா) ஆவர்.

யூனுஸ் (அலை)
யோனா (Jonah கி.மு. 781-741) இவர்கள் இராக்கிலுள்ள நீனவா (நினிவே) எனும் ஊரில் வாழ்ந்தார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

ரக்அத்
தொழுகையில் ஒரு முறை நிற்றல், ஒரு முறை குனிதல், இரண்டு சஜ்தாக்கள் (சிர வணக்கம்) செய்தல் அவற்றுக்கிடையே சிறிது நேரம் அமர்தல் ஆகிய நிலைகளாய் உள்ளடக்கிய ஒரு பகுதி.

ரபீஉல் அவ்வல்
இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதம்.

ரபீஉல் ஆகிர்
இஸ்லாமிய ஆண்டின் நான்காவது மாதம்.

ரமலான்
இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம்.

ரஜப்
இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம்.

லுஹ்ர்
மதியத் தொழுகை. பிற்பகலின் துவக்கத்திலுள்ள நேரம். இதிலிருந்து பிற்பகலின் நடுப்பகுதி வரையுள்ள நேரத்தில் நிறைவேற்றப்படும் கடமையான தொழுகையே 'லுஹ்ர் தொழுகை' எனப்படுகிறது.

லூத் (அலை)
லோத்து (Lot -கி.மு. 2061) இறைத்தூதர்களில் ஒருவர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் கிழக்கு ஜோர்டானில் உள்ள சதூம் (சோதோம்) பகுதி மக்களை நல்வழிப்படுத்த இறைத்தூதராக நியமிக்கப்பெற்றார்கள். சிலை வழிப்பாட்டையும் ஒருபால் உறவையும் எதிர்த்துத் தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள்.

வஸ்க்
பழங்காலத்தில் அரபியர்கள் பயன்படுத்திய ஒரு அளவை. அது இன்றைக்கு 191.56 (அல்லது 122.40) கிலோ கிராம் எடை பெறுமானமுள்ளது.

வஹீ
இறைச்செய்தி. வேத அறிவிப்பு, வானவர் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பெற்ற இறைச்செய்தி வேத வெளிபாடு

ஹஜ்ஜத்துல் வதா
ஹஜ் கடமையாக்கப்பட்ட பின்னர், நபி (ஸல்) அவர்கள் தாம் இறப்பதற்கு முந்தைய (ஹிஜ்ரீ பத்தாவது) ஆண்டில் முதலாவதாகவும் இறுதியாகவும் செய்த ஹஜ் ஹஜ்ஜத்துல் வதா (விடைபெறும் ஹஜ்) என்று அழைக்கப்படுகிறது.

ளுஹா
சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரம். முற்பகல் இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுத எட்டு ரக்அத் தொழுகைக்கு ளுஹா தொழுகை எனப்படுகிறது.

ஜனாஸா
பிரேதம். பிரேதம் வைக்கப்பட்டுள்ள பெட்டி ஆகிய இரண்டையும் இச்சொல் குறித்தும் இறந்துப்போன ஒருவருக்காகப் பிரார்த்திக்கும் நோக்கத்தில் தொழப்படும் இறுதித் தொழுகைக்கே 'ஜனாஸா தொழுகை' என்பர்.

ஜிப்ரீல்
ஜிப்ரால், ஜிப்ராயீல் Angel Gabriel) இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு இறைச்செய்தி கொண்டுவந்த வானவர்.இவரே வானவர்களின் தலைவர் ஆவார்.

ஜின்கள்
மனித இனமும் வானவர் இனமும் அல்லாத ஓர் இனம். இந்த இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும். கண்ணுக்குத்தெரியாத வாயுவாகவும் மனிதன் உட்பட ஏனைய பல்வேறு உயிரினங்களின் தோற்றங்களிலும் ஜின்கள் காட்சியளிக்க முடியும். மனித இனத்திற்கு முன்பே இந்த இனம் படைக்கப்பட்டுவிட்டது. ஜின்களில் ஆண், பெண் சந்ததிப் பெருக்கம் ஆகியவை உண்டு. இவர்களுக்கு மார்க்க சட்டம், நன்மை தீமை ஆகியவற்றில் தன்னியலாற்றல் ஆகியவை உண்டு. சைத்தான்களின் தந்தையான இப்லீஸ் இந்த இனத்தில் பிறந்தவன் ஆவான்.

ஜூமாதல் ஆகிரா
இஸ்லாமிய ஆண்டின் ஆறாவது மாதம்

ஜூம்ஆ
வெள்ளிக்கிழமை. இந்நாளில் முஸ்லிம்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும்போது பள்ளிவாசலில் ஒன்றுக்கூடி ஜூம்ஆ எனும் சிறப்புத் தொழுகையை நடத்துவதால் அது ஜூம்ஆ நாள் (ஒன்றுகூடும் நாள்) என்று அழைக்கப்படுகிறது.

ஷஅபான்
இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம்

ஷவ்வால்
இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதம்

ஷியாக்கள்
தவறான கொள்கைளைக் கொண்ட முஸ்லிம்களில் ஒரு பகுதியினர். எனவேதான் ஷியாக்கள் என்றால் பிரிவுகள் என்று பொருள் எனவே தான் அவர்களை ஒரு பிரிவினர் என்றும் சொல்லப்படுகிறது. அலீ (ரலி) அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்த அவர்களுடைய அபிமானிகளே 'ஷியாக்கள்' எனப்பட்டனர். நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அலீ (ரலி) அவர்களே ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்றும் அவர்களுக்கு பின்னால் அவர்களின் வழித்தோன்றலுக்கு மட்டுமே ஆட்சி பொறுப்பு உரியது என்பதும் மற்றவர்களுக்கு சிறிதளவும் அதில் உரிமையில்லை என்பதும் அவர்களின் கொள்கையாகும்.

ஸஃபர்
இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம்

ஸகாத்
கட்டாயக்கொடை அல்லது கட்டாய தர்மம்.ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் ஒரு முஸ்லிமின் சேமிப்பில் இருந்தால், அவர் அதிலிருந்து இரண்டரை சதவீகிதம் கட்டாயமாகத் தானம் வழங்கவேண்டும். குர்-ஆனில் (9:60) குறிப்பிடப்பட்டுள்ள எட்டுப் பிரிவினரில் எவருக்கேனும் இது வழங்கப்பட வேண்டும்.

ஸபூர்
நபி யாகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்த தாவூத் (அலை) அவர்களுக்கு (David) இறைவன் அருளிய வேதம். இதுவே ஸபூர் வேதம் எனப்படுகிறது.

ஸாஉ
மதீனாவில் நடைமுறையில் இருந்துவந்த 2 கிலோ 135 கிராம் எடை கொண்ட ஓர் அளவை

ஸாலிஹ்
சவுதியில் உள்ள 'அல்ஹிஜ்ர்' எனும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர் ஆடம்பர வாழ்வில் மூழ்கி சிலை வழிப்பாட்டில் வீழ்ந்து கிடந்த 'ஸமுத்' கூட்டத்தாரை சீர்திருத்த இவர்கள் இறைவன் பால் அனுப்பட்டார்கள்.

ஹராம், ஹலால்
திருக்குர்-ஆன் மற்றும் நபி (ஸல்) அவரளால் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டதே ஹராம் ஆகும்.அதுப்போல சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது ஹலால் ஆகும்.
மேலும் ஹராம் என்ற பதம் புனித என்னும் பொருளிலும் கையாளப்படுகிறது அதாவது முஹர்ரம் மாதத்தை அஷ்ஷஹ்ருல் ஹராம் (புனித மாதம்) என்றும் மக்கா நகரை அல்பலதுல் ஹராம் (புனித நகரம்) என்றும் கஅபாவை உள்ளடக்கிய பள்ளிவாசலை 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (புனித பள்ளிவாசல்) என்றும் குறிப்பிடப்படுவார்கள்.


ஹஜருல் அஸ்வத்
கஅபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள கறுப்புக்கல். கஅபாவை (தவாஃப்)சுற்றும்போது இதை முத்தமிடல் நபிவழியாகும். இக்கல்லின் ஒரு மூலைப் பகுதிக்கு 'ருக்னுல் யமானீ' (யமனிய மூலை) என்றும் பெயருண்டு. "இக்கல்லுக்கு எந்த ஒரு தெய்வீக தன்மையும்" கிடையாது.

ஹாருன் (அலை)
ஆரோன் (Aaron) இறைத்தூதர். நபி மூசா (அலை) அவர்களின் மூத்த சகோதரர் எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ராம்சேஸை (ஃபிர்அவ்ன்) எதிர்க்கப் போராடியதில் மூசா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள்.

ஹிராக்ளீயஸ்
ஹிரக்ல் (Heraclius -கி.பி. 610-641) இது நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த கிழக்கு ரோமானியப் பேரரசர் சீஸர் பெயர். இவரோடு கிழக்கு ரோமானியப் பேரரசு முடிவுக்கு வந்தது.

ஹிஜ்ரத்
புலம் பெயர்தல். ஒருவர் இறை மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குத் தடைகள் ஏற்படும்போது, தாம் வசிக்குமிடத்தைத் துறந்து வேற்றிடம் செல்லல்.

ஹிஜ்ரீ
இஸ்லாமிய ஆண்டு.ஹிஜ்ரத் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே 'ஹிஜ்ரீ' எனும் இஸ்லாமிய ஆண்டு துவங்குகிறது. அவைகள் (1)முஹர்ரம் (2)ஸஃபர் (3)ரபீஉல் அவ்வல் (4)ரபீஉல் ஆகிர் (5)ஜூமாதல் ஊலா (6)ஜூமாதல் ஆகிரா (7)ரஜப் (8)ஷஅபான் (9)ரமலான் (10)ஷவ்வால் (11)துல்கஅதா (12)துல்ஹஜ்

ஹூதைபிய்யா
இது மக்காவிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். ஹிஜ்ரீ 6வது ஆண்டு (கி.பி.627) நபி(ஸல்) அவர்களும் மக்காவாசிகளும் இங்கு செய்து கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் 'ஹூதைபிய்யா ஒப்பந்தம் அல்லது ஹூதைபிய்யா உடன்படிக்கை' எனப்படுகிறது.

ஹூனைன்
மக்காவிற்கும் தாயிஃபிற்கும் இடையே உள்ள 'அரஃபா'வின் திசையில் மக்காவிலிருந்து சுமார் 18 கி.மீ. சற்று தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கின் பெயர். ஹிஜ்ரீ 8வது ஆண்டு (கி.பி. 630) ஷவ்வால் மாதம் 'ஹவாஸின்' எனும் அரபுக்குலத்தாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இங்கு நடைப்பெற்ற போரே 'ஹூனைன் போர்' எனப்படுகிறது.

ஹூத் (அலை)
நபி நூஹ் (அலை) அவர்களுக்கு பின்னர் வந்த இறைத்தூதர்களில் ஒருவர். (கி.மு.2538). பழங்கால அரபு சமுகத்தாரான 'ஆத்' சமுகத்துக்கு நல்வழி காட்ட இறைவன் பால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

இஃதிகாப்
தங்கியிருத்தல். தடுத்துக்கொள்ளல் என்பன இதன் சொற்பொருளாகும். இறைவனுக்காக, இறைத்தூதர் வழியில் குறிப்பிட்ட காலம் பள்ளிவாசலில் தங்கும் ஒரு வகை வழிபாடு. ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்
'
அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியுடையோர்' என்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு நபித்தோழர்கள் வழியுடையோர் என்றும் பொருளாகும். நபிவழியையும், நபித்தோழர்கள் வழியையும் பின்பற்றுவர்கள் யாரோ அவர்களே அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இல்யாஸ்
எலியா, நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஓர் இறைத்தூதர். அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டவர்கள்.

உஹூத்
மதீனாவிற்கு வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மலை. ஹிஜ்ரீ 3வது ஆண்டு (கி.பி.625) ஷவ்வால் மாத மத்தியில் முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் இடையே இங்கு நடைபெற்ற சண்டையே 'உஹூத்ப் போர்' எனப்படுகிறது.

தஹஜ்ஜூத்
இரவுத்தொழுகை. பின்னிரவு நேரத்தில் நிறைவேற்றப்படும் எட்டு ரக்அத்கள் கொண்ட ஒரு கூடுதல் தொழுகை. 'தூக்கத்தைக் கைவிடல்' என்பது இதன் சொற்பொருள் ஆகும்.

ஃபர்ள்
கட்டாயக் கடமை என்பது இதன் பொருள். இதில் ஒவ்வொரு தனிமனிதன் மீதும் விதியாகின்ற கடமைக்கு 'ஃபர்ள் ஐன்' (தனிமனித கடமை) என்பர். (உ-ம்)ஐவேளைத் தொழுகை, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது விதியாகின்ற கடமைக்கு 'ஃபர்ள் கிஃபாயா' (சமுதாய கடமை) என்பர். (உ-ம்) ஜனாஸா தொழுகை.


ஆமீன்
'
அப்படியே ஆகட்டும் என்று பொருள். 'சீரியாக் அல்லது ஹூப்ரு' மொழிச்சொல்லான இது "இறைவா! ஏற்றுக்கொள்வாயாக!!" எனும் பொருளில் ஆளப்படுகிறது

ஆயத்
வசனம். இதன் பன்மை ஆயாத். திருக்குர்-ஆனில் உள்ள அனைத்து வசனங்களையும் குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் சான்று, அற்புதம் ஆகிய பொருள்களும் இதற்கு உண்டு.

இணைவைத்தல்
(
ஷிர்க்- பல தெய்வக் கொள்கை) ஏக இறைவனுக்கு இணையாகப் பிற பொருட்களையோ, மனிதர்களையோ ஏனைய உயிரினங்களையோ நம்பிக்கை கொள்வதற்கு இணைவைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்று பெயர். ஏக இறைவனுக்கே உரித்தான பண்புகள், தனித் தன்மைகள், வழிபாடுகள் மற்றும் அதிகாரங்கள் ஆகியவற்றில் அவனுக்கு இணையாகப் பிறரைக் கருதுவதும் இணைவைப்பில் அடங்கும். இச்செயல்களை மேற்கொள்பவர்களை 'முஷ்ரிக்' (இணைவைப்பாளர்) என்பர். 'முஷ்ரிகூன் அல்லது முஷ்ரிகீன்' என்பது இதன் பன்மையாகும். இணைவைத்தல் மன்னிக்கமுடியாத குற்றம் எனக் குர்-ஆன் சாடுகிறது.

இத்தா
'
கணித்தல், எண்ணுதல், காத்திருத்தல்' என்பன இதன் சொற்பொருளாகும். கணவனால் மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் மூன்று மாதவிடாய்க் காலமும், கணவன் இறந்த பெண் நான்கு மாதம் பத்து நாட்களும் வீட்டில் தங்கியிருத்தலே "இத்தா" ஆகும். மாதவிடாய் அற்றுப்போன பெண் மணவிலக்கு செய்யப்பட்டால் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.கருவுற்றிருக்கும் பெண்ணின் இத்தாக் காலம், பிரசவம் வரையிலாகும். கணவன் இறந்துப்போன கர்ப்பிணிக்கும் இது பொருந்தும்.

இஸ்ராஃபீல்
முக்கிய வானவர்களில் ஒருவர். உலக அழிவின்போதும், மனிதர் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போதும் எக்காளம் (ஸூர்) ஊதும் பொறுப்பு இவரிடமே ஒப்படைக்கப்படுகிறது.

உம்மீ
'
தாயை சார்ந்தவர்" என்பது பொருள். பொதுவாக எழுத வாசிக்க தெரியாத தாயின் இயல்புகளை மட்டுமே பெற்ற ஒரு மனிதனை 'உம்மீ' என்பர் அரபுகள். நபிகளார் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்த மனிதர்கள் அரிதாகவே காணப்பட்டனர். எனவே அன்றைய மக்கள் 'உம்மிய்யூன்' என்றழைக்கப்பட்டனர். அத்தகைய சமுதாயத்திற்கு அறிவொளியே ஏற்ற வந்த நபிகளாரும் எழுத வாசிக்க தெரியாத உம்மீயாகவே இருந்தார்கள்.

கஸ்ர்
சுருக்குதல், கட்டாயமான நான்கு ரக்அத் தொழுகைகளைப் பயணத்தின் போது இரண்டு ரக் அத்துகளாக சுருக்கித் தொழுவதற்கே 'கஸ்ர்' என்றுப் பெயர்.

கிரான்
(
ஹஜ் வகை) இதற்கு 'சேர்த்தல்' என்று பொருள். ஹஜ்ஜையும், உம்ராவையும் ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுவது ஹஜ் கிரான் என்று அழைக்கப்படும்.

அர்ஷ்
ஆட்சி பீடம், சிம்மாசனம், கட்டில், வீடு, முகடு போன்ற பல பொருட்கள் இதற்கு உண்டு "இறைவனின் ஆட்சி பீடம்" அல்லது "இறைவனின் அரியணை" எனும் பொருளில் இச்சொல் ஆளப்படுகிறது