Saturday, April 07, 2012

விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள்



A termite mound consists of several chambers
A termite mound consists of several chambers 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த கட்டிடத்தைப் போல கட்டப்பட்ட கறையான் புற்று இந்த சிறிய படைப்புகளால் கட்டப்பட்டது. ஆயினும் எந்தவித தவறுமின்றி இந்த புற்றுக்களை கறையான்கள் வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி கட்டுகின்றன.
புற்று என்பது நம் கண் பார்வைக்குத் தெரியும், மண்ணிற்க்கு மேலே உள்ள அடுக்கு ஆகும். நிலத்திற்க்கு மேலே தெரியும் உயரத்திற்கு, நிலத்திற்க்குக் கீழே உள்ள அடுக்கும் ஆழமாக இருக்கும். முதலில் அடித்தளம் அமைத்து, அதற்கு மேலே சிறு சிறு வாய்க்கால்களை பணிக்கறையான்கள் அமைக்கும். அதற்கும் மேலே பூஞ்சைத் தோட்டங்களை அமைக்கும்.
இந்த பூஞ்சைகள், கறையான்களின் உணவுப் பொருட்களை மட்கச்செய்து, கரையான்கள் உண்ண ஏதுவாக மாற்றும். இதற்குக் கைம்மாறாக, கறையான்கள் தங்களின் சுரப்பினால் புற்றில் வேறு எந்த நுண்ணுயிரியும், இந்த பூஞ்சைக்குப் போட்டியாக வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். இந்த பூஞ்சைகள்தான், மழைக்காலத்தில் காளான்களாக, புற்றிலிருந்து முளைக்கும்.
இந்த பூஞ்சைத் தோட்டங்கள், நிலமட்ட அளவிலேயே இருக்கும்.அதற்கும் மேலே, மண்ணாலான புற்று இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது திறந்த துளைகளுடன் இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

நாம் படத்தில் காண்பது போன்று இந்த புற்று ஒன்றல்ல. பல. இளம்குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை, கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம், மற்றும் ராணியின் அறை என பல சிறிய மற்றும் பெரிய பிரிவுகளைக் கொண்டதுதான் கறையான் புற்று. புற்றுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்யேக குளிர்ந்த காற்றோட்ட வசதி (Ventilation). மிக மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்று தேவை.

எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷன நிலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளிர்ந்த நிலையில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது. அவ்வாறு இல்லையெனில் உஷ்ணத்தின் காரணமாக கறையான்கள் உயிரிழக்க நேரிடும். எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களிள் உட்புறம் காற்று புகும் வகையில் துளைகளை உருவாக்குகின்றன. புற்றுக்களின் தரைப்பகுதியைத் தோண்டி தண்ணீரை கசியச் செய்கின்றன.

புற்றுக்களின் தரைப்பகுதியில் கசியும் தண்ணீரும், வெளியிலிருந்து வரும் காற்றும் கலந்து கறையான்களுக்குத் தேவையான குளிர்ந்த சீதோஷ்னநிலை உருவாகிறது. இந்த குளிர்ந்த காற்றின் மூலம் கறையான்கள் தங்கள் புற்றுகளில் அவைகள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஈரப்பதத்தையும் , வெப்ப நிலையையும் சம நிலையில் வைத்துக் கொள்கின்றன.

மேற்படி முறையில் கறையான்கள் தங்கள் புற்றுக்களில் உள்ள சீதோஷ்ன நிலையை கட்டுப்படுத்துவது எத்தனை கடினமான வேலை என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?. இத்தகைய கடினமான வேலையை செய்து முடிப்பதற்கு கறையான்கள் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் பல விஷயங்களை ஒன்றிணைத்து அவைகளை தங்களது கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர, கறையான்கள் செய்கின்ற எண்ணற்ற காரியங்களில் சுருக்கமாக ஒரு சிலவற்றைத்தான் நாம் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். இங்கே குறிப்பிட்டிருக்கும் செயல்களோடு இன்னும் ஏராளமான செயல்களை கறையான்கள் செய்கின்றன.

கறையான்களின் குணநலன்களில் முக்கியமான மற்றொன்று யாதெனில், அவைகள் தங்கள் புற்றுக்களை பாதுகாக்கும் விதம். கறையான் புற்றுக்களிள் உயரம் ஏழு மீட்டர் வரை (21 அடி) இருக்கும். இந்த புற்றுக்களில் ஒரு சிறிய பழுது ஏற்பட்டுவிட்டாலும் உடனடியாக கரையான்கள் எச்சரிக்கையாகி விடுகின்றன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கறையான்கள் தங்களது தலைகளை புற்றுக்களின் சுவர்களில் மோதி மற்ற கறையான்களை விழிப்படையச் செய்கின்றன.

எச்சரிக்கை செய்தி கிடைத்ததும் விழிப்புற்ற மற்ற கறையான்கள் குஞ்சுப் பருவத்தில் இருக்கும் கறையான் முட்டைகளை (Larve)பாதுகாப்பான மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்கின்றன. ராஜா மற்றும் ராணி கறையான்கள் இருக்கும் அறையின் வாயிற்பகுதி உடனடியாக கட்டப்படும் சுவர் மூலம் மூடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கரையான்கள் சூழந்து கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுவர் கட்டத் தேவையான பொருட்கள் யாவும் வேலைக்கார கறையான்களால் கொண்டு வரப்படுகின்றது. சில மணி நேரங்களில் பாதிக்கப்பட்ட பகுதியின் வெளிப்பகுதி , மற்றும் உட்பகுதி முழுவதும் சரிசெய்யப்படுகின்றது.

இராணிக்கறையான்

ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு, இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப காலத்தில், இராணி இடத்தை தேர்ந்தெடுத்து, சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும், ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் எண்ணிக்கைக் குறையும் போது, அவற்றிற்கே உரிய நாற்றம் குறையும்.



இதனை அறிந்த இராணிக்கறையான், அவைகளுக்கான முட்டைகளை வைத்து அவ்வெண்ணிக்கையை பெருக்கச் செய்யும். வாழிடம் சரியில்லாத போது, இராணிக்கறையான் இடப்பெயர்ச்சி செய்ய, மற்ற கறையான்களுக்குக் கட்டளையிடும். முட்டையிடும் பெரிய இராணிக்கறையான், எப்பொழுதும் தனது நகரும் தன்மையை இழப்பதில்லை. ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
ஆண்கறையான்கள்:சில சிற்றினங்களில் மட்டுமே, ஆண் கறையான் இறந்தாலும், மற்றொரு ஆண் கறையான், இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை, ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன், குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை, பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால், அவை இறந்து விடும்.
இவற்றுள் வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.
வாகைக்கறையான்களுள் இரண்டு வகை உண்டு.
  1. பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும்.  இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
  2. துப்பிக்கறையான்  - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.
பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்.
ஈசல்கள்: மழைக்காலத்தில், வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே, அவை இறக்கை முளைத்து, ஈசல்களாக வெளியில் வந்து, கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து, ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால், கறையான்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது
 இவ்வாறு பல பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு கறையான்களும் அவசர காலங்களில் மட்டுமின்றி சாதாரண வேளைகளிலும் ஒழுங்குற வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் செயல்படுவது போல எந்தவித குழப்பமுமின்றி சிறப்புற செயல்படுகின்றன. இவ்வாறு அவகைள் ஒரு குறுகிய கால அவகாசத்தில் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை இத்தனை சிறப்பாக முடிப்பதிலிருந்து கறையான்களுக்கிடையே முறையாக தொடர்பு கொள்ளும் திறமை உண்டென தெளிவாக அறிய முடிகிறது. கறையான்கள் தங்களுக்கிடையே வேலையை முறையாக பகிர்ந்து கொள்கின்றன.

பகிர்ந்து கொண்ட வேலைகளுக்கேற்ப எந்தவித குழப்பமுமின்றி வானளாவிய உயரத்திற்கு கூடுகள் கட்டுகின்றன. கட்டிய கூட்டினை பாதுகாப்பதற்கென முன்னெச்சரிக்கையான திட்டங்கள் தீட்டி அதன்படி செயல்படுகின்றன. இத்தனை வேலைகளையும் திறமையாக செய்து முடிக்கும் கறையான்கள் பார்வையற்றவை.

கறையான்கள் செய்கின்ற வேலைகள் எதனையும் கறையான்களால் பார்க்கமுடிவதில்லை. பார்வையற்ற கறையான்கள் எப்படி இத்தனை திறமைசாலிகளாக இருக்கின்றன?. எப்படி இத்தனை பெரிய திட்டங்கள் தீட்டி அதன்படி செயல்படுகின்றன?

இதுபோன்ற கேள்விகளுக்கு பரிணாம வளர்ச்சிக் கொள்கை க்காரர்கள் அளிக்கும் பதில் என்ன தெரியுமா? கறையான்கள் கொண்டிருக்கும் இத்தனை திறமைகளும் அவைகளுக்கு எதேச்சையாக உருவாயினஎன்பதுதான். எப்படி சிந்தித்தாலும் அவர்கள் கூறும் இந்த பதில் தவறானதே. ஏனென்றால் கறையான்களின் புற்றில் உள்ள ஒரு சிறிய பகுதி கூட உதாரணத்திற்கு அவைகள் ஏற்படுத்தும் காற்றோட்ட வசதி எதேச்சையாக உருவானது இல்லைஎன்பதற்கு உதாரணமாக எடுத்துக் கூற போதுமானதாகும். மேலும் கறையான்களுக்கு அவைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதும் தெளிவு.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ், தேனீக்களை சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி என குறிப்பிடுகிறான். அத்தோடு அதனை நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தில் தேனீக்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தேனீக்கள் நமக்காக தேனை உருவாக்குகின்றன என்பதும், அந்த தேனை உருவாக்குவது எப்படி என்று வல்ல அல்லாஹ் தேனீக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான் என்றும் மேற்படி வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும் , மரங்களிலும் , உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்’ ( என்றும்) பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல் ‘ (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது , அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு, நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

(அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்ல் – 68 மற்றும் 69வது வசனங்கள்).

எப்படி தேனை உருவாக்க வேண்டும் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தது பற்றி அருள்மறை குர்ஆனின் வசனத்தில் குறிப்பிட்டது போன்று கறையான்களுக்கும் அல்லாஹ்வே எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்திருக்கிறான். வல்ல அல்லாஹ்வே பார்வையற்ற இந்த உயிரினங்களுக்கு அவைகள் தொடர்பு கொள்ளக் கூடிய முறைகளை பற்றியும் அறிவித்து, லட்சக்கணக்காக கறையான்களில் ஒவ்வொன்றுக்கும் அவைகள், அவைகளின் கூடுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்பதும் நாம் பெறும் தெளிவு.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்:

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ்; வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள், வானத்திலும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்; வையன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை, அவ்வாறு இருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். ‘ (அத்தியாயம் 35 ஸுரத்துல் ஃபாதிர் – 3வது வசனம்)