Thursday, April 05, 2012

பொய் பேசுவது மார்க்கத்திற்கு புறம்பானது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

பொய் பேசுவது மார்க்கத்திற்கு புறம்பானது. அல்லாஹ் (ஸுப்) தடை செய்தது. நாம் உண்மைக்கு மாற்றமான விஷயங்களைக் கூறி அதாவது பொய் பேசி அதனால் இந்த உலக ஆதாயங்களை அடைய ஆசைப்படுகின்றோம். சில விஷயங்களில் உண்மையைப் பேசினால் அதனால் நமக்கு தொந்தரவுகள் மற்றும் கஷ்டங்கள் வரும் என நினைத்து பொய் பேசி அதிலிருந்து தப்பிக்க முயல்கின்றோம். வேறு சில சமயங்களில் உண்மையைப் பேசினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் நம்மைத் தாழ்வாக நினைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு சரளமாக எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பொய் பேசுபவர்களாக இருக்கின்றோம். இப்படியாக உள்ள சில காரணங்களிலனால்தான் பொய் பேசுகின்றோம்.
இந்த உலக வாழ்க்கையிலே நாம் பொருள் புகழ் அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்கின்றது. பகட்டோடும் ஆடம்பரத்தோடும் உலா வர வேண்டும் என்பதை இலக்காக நிர்னயித்துக்கொண்டோம். நல்ல உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்பது மட்டும் பேராசையாக இருக்கின்றது.
மேற்கண்ட அந்த இலக்குகளை அடைய நேர்மை ஒழுக்கம் உண்மை பேசுதல் மற்றும் அல்லாஹ் (ஸுப்) அனுமதித்த முறைகளிலே அவைகளை அடைவது சிரமமாக இருக்கின்றது. உண்மையாளனாக நடக்கும் போது பெரும்பான்மையான நேரங்களில் அந்த இலக்கு எட்டாக்கணியாக இருக்கின்றது. நமக்கும் நமது இலக்குக்கும் இடையே உண்மை பேசுதல் நேர்மையாக நடத்தல் போன்றவைகள் பெரியதொரு தடுப்புச்சுவராக இருக்கின்றது.ஆகையால் அந்த தடுப்புச்சுவரை உடைக்க தகர்த்தெறிய கையில் கடப்பாறையை எடுத்துவிட்டோம். அந்த சுவரை இடிக்கும் வேலையிலே உண்டான சிறிய துவாரம் வழியாக நாம் அடைய நினைத்த இலக்கு கண்னுக்குத் தெரிகின்றது. ஆம்! இந்த உலக இன்பம் அந்த இடிபாடுகளுக்கிடையே நம்மை சுண்டி இழுக்கின்றது.
கண்னுக்கு தெரிய ஆரம்பித்த அந்த இலக்கை அடைய தடுப்புச்சுவரை உடைத்தெறிய முற்பட்டுவிட்டோம். தடுப்பாக இருந்து நம்மைக்காக்கும் அரணாக நிற்கின்ற அந்த சுவர் நம்மை நிரந்தரமான இன்பத்திற்கு இட்டுச்செல்லக்கூடியது. நிரந்தரமான துன்பத்தில் இருந்து நம்மைக்காக்கக்கூடியது என்பதையெல்லாம் மறந்துவிட்டோம். கண்னுக்குத் தெரிகின்ற இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கும் சொற்ப இன்பம் நம்மை மயக்கிவிட்டது. இந்த உலக வாழ்க்கையின் சிறிய துன்பம் நம்மை அச்சுறுத்துகின்றது. நாம் இந்த உலக வாழ்க்கையையே சதமாக நினைத்துக்கொண்டோம். பொய் பேசுவதன் மூலம் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டோம்!
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு அல்குர்ஆன் 2:10
அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். அல்குர்ஆன் 9:77
எனவும் மேலும் அல்லாஹ் (3:61) (24:7) ஆகிய வசனங்களின் மூலம் பொய் பேசுவதின் பயங்கரத்தை எடுத்துரைக்கின்றான்.அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானோர் வெற்றி பெற முடியுமா? அல்லாஹ் (ஸுப்)அந்த தீய செயல்களைவிட்டும் நம்மைப் பாதுகாப்பானாக!
பொய் பேசுவது நம்மை எங்கு கொண்டு சேர்க்கும் என்பதை கீழ்கண்ட நபி மொழி வாயிலாகவும் இதைப்போன்ற வேறு பல நபி மொழிகள் வழியாகவும் அறியலாம் மஸ்வுத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற புகாரி முஸ்லிம் கிரந்தங்களில் இடம்பெற்ற நபி மொழியாவது:- .பொய் பேசுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் பொய் தீய வழியில் கொண்டு செல்கிறது. மேலும் தீய வழி நரகத்திற்கு கொண்டு செல்கிறது..
நாம் பொய் பேசுவது மறுமையில் நன்மை சேர்க்கும் என்பதை நாமே ஏற்றுக்கொள்ளாத ஒன்று. இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கின்ற சொற்ப இன்பத்திற்காக நாம் விலைமதிக்க முடியாத சுவன வாழ்க்கையை விலை பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்ஷா அல்லா இனியாவது பொய் பேசுவது இல்லை என முடிவு எடுப்போம்.
Source-readislam