Sunday, April 22, 2012

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

வழக்குத் தமிழில், “பொறாமைஎன்றும் இலக்கியமாய் அழுக்காறுஎன்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.


இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.



இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.

 விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.

 மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.

தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.

ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).

யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.

நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!

 இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.

 இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.

மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.

 அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.

இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையதுஎன்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]

“... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ...என்கிறது இறைமறை (49:13).

 மேலும் “... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.

 இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.

மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.
இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.

 சுருங்கக் கூறின்,
ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.

பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.

ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.

தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.

உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்

மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.

தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!

 ஆக்கம்: இப்னு ஹம்துன்

முஜாஹிர்களும் மன்னிப்பும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்


 أَبَى هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக

நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள்  அறிவிக்கிறார்கள் என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால்  முஜாஹிர்களைத்தவிர  முஜாஹிர்கள் என்பவர் யார் எனில் அவர் இரவில் ஒரு பாவச்செயலை செய்கிறார்  பின் காலையில் எழுந்து மறுநாள் தன் முந்தின நாள் இரவில் செய்த காரியத்தை பகிரங்கப்படுத்துகிறார்.
இரவில் அவர் செய்ததை அல்லாஹ் மறைத்துவைத்திருந்தான் ஆனால் அவனோ அந்த திறையைக் கிழிந்த்துவிட்டான்.

என் நண்பர் ஒருவரோடு வீதியில் நடந்துகொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு கூட்டத்தினர் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை நெருங்க நெருங்க அவர்களின் சம்பாஷணையில் சில வார்த்தைகள் என் காதில் விழ ஆரம்பித்தது.
அதில் ஒருவர் தம் இளமைக்காலத்து சுய புராணத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.தன் பாலிய வயதில் விலைமாது என்றால் யார்என்று அறிய நாடி தான் அதில் பெற்ற அனுபவங்களை தன் சக நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறார். அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்”.
திடுக்குற்று விழித்தேன். இதோடு கலைந்தது போனது என் கனவு, உயிரற்று போனது என் உறக்கமும். இது நான் கண்ட சமீபத்திய கனவு, ஏன் இப்படி ஒரு கனவு ? என்று என் மூளையில் மின்மினிகள் வட்டமிட, என் சிந்தைக்கு விருந்தாய், அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்த்து இந்த நபிமொழி. இறைவன் தனக்கென 99 பெயர்களை வகுத்து வைத்துள்ளான்.
அந்த பெயர்களின் வெளிப்பாடக இவ்வுலகில் தன் இயக்கங்களை நிகழ்த்துகிறான். அப்படி அவனுக்குள்ள விசேஷ பெயர்களில் முக்கியமானவைகளில் ஒன்று சத்தார்என்பதாகும்.சத்தார் என்பதன் பொருள் மறைப்பவன்என்பதாகும். இன்று நாம் நல்ல தந்தையாக/ தாயாக, மகனாக/மகளாக, கணவனாக/ மனைவியாக, முதலாளியாக/ தொழிலாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம்  யோசித்து பாருங்கள் நம் உண்மை நிலைகள் அடுத்தவர்களுக்கு தெரிய ஆரம்பித்தால், நம் மானம் மரியாதைகள் என்னவாகும், அல்லது நாம் வாழ்க்கையை நிமிடங்கள் தான் சந்தோஷமாக கரையுமா? வாழ்வில்  அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நாம் மறைத்த பல விஷயங்களை நாம் நம் மனதில் சுமைகளாக தூக்கிக்கொண்டு திரிகிறோம்.
இந்த விஷயத்தின் இறைவன் தன் படைப்புகள் மீது காட்டிய அற்புதமான கருணையின் விளைவு. அவர்கள் தாங்கள் செய்த தவறுகளோடு மானம் மரியாதை இழக்காமல் வாழ்கிறார்கள்.

நான் மேலே சுட்டிக்காட்டிய கனவைப்போன்று, இன்று நம் வாழ்வில் நடந்துகொண்டுள்ள நிஜங்கள் எத்தனையோ. தவறை செய்துவிட்டு அதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சபைகளில் வெளிப்படுத்துகிறோம், இன்னும் ஒரு படி மேலே போய் அதை தன் பெருமையின் அடையாளமாகவும் பயன்படுத்தவும் விரும்புகிறோம். தன் தவறுகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற நிலைக்கூட நாம் மறந்துவிடுகிறோம்.

மனித மரியாதைகள் (Human values) மறுக்கப்படுகின்ற இந்த காலத்தில், மனிதனே தன் மரியாதைகளை இழப்பதை பெருமையாக நிலைக்கிற காலையில். நபி பெருமானின் வார்த்தைகள் எத்துணை ஆக்கப்பூர்வமானவை என்று இன்று புரியமுடிகிறது.
இந்த வார்த்தைகள் தான் மனிதனின் (Stand) நிலைப்பாட்டை, அவன் எங்கிருக்கிறான் என்பதை அவனுக்கே அடையாளப்படுத்துகின்றன. சுயத்தை இழந்து போலியான மரியாதைகளில் தன்னை துழைத்துவிட்ட மனித சமுதாயம். மீண்டும் தன் சுயதேடுதலில் இருங்குவதற்கு இதைவிட அழமான அறிவுரைகள் எங்கு கிடைக்கும். 

இது இஸ்லாமியர்களுக்கு என்று சொல்வதைவிட பொதுவாக மனித சமூதாயத்திற்கான ஒரு அறைகூவல். இன்று இந்த ஹதீஸை உரைகல்லாக்கி நம் வாழ்க்கையை அதில் தீட்டிப்பார்தால், கிடைக்கிற விடைகளோ எத்தனை எத்தனை..
பொதுவாக நம்மை படைத்தவன் இறைவன் வகுத்த நீதி அறைகளில் நடப்பதை வீதிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை ”.ஏனெனில், அழகு என்பதற்கு அளவுகோலே ஆடையோடு இருப்பது தான். ஆடை அவிப்புகள் ஒரு காலமும் அழகாக ஆகிவிடாது, அது ஆபாசம் மட்டுமே. சிந்தனையில் கூட வன்புணர்ச்சியால் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு வேண்டுமானால் அது அழகாக தெரியலாம்.
விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆகாஎன்பது ஒரு விதி.  இறைவன் வகுத்த நியதிகளில் எவை மறைவாக உள்ளதோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட்வேண்டியவையே. உதாரணத்திற்கு ஒன்று நோன்பு காலங்களில் நோன்பு பிடிக்க முடியாதவர் என்று ஒரு பேணுதல் உள்ள மருத்துவரால்

வழிகாட்டப்படுகிற ஒருவர் நோன்பை விட மார்க்க சட்டங்கள் அனுமதி அளிக்கிறது. ஆனால், காலம் நோன்புடையதாக இருப்பதால் அவர்கள் அதன் கண்ணியத்தை பேணி மற்ற நோன்பாளிகள் வெளியில் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இவரும் இருக்கவேண்டும்.
தன் உணவு உண்ண வேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டால் தான் உண்ணுவதை பிறர் பார்க்காத வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும் என்ன ஒரு சிறந்த வழிகாட்டுதலை செய்து தந்திருக்கிறார்கள் நபியவர்கள். 
இதே அடிப்படையில் தான் இஸ்லாமிய அடையாளங்களை பொது இடங்களில் வெளிப்படுத்தினால் கேவலமாக இருக்கும் என்று மறைத்தாலும், மறைக்க வேண்டிய வைகளை வெளிப்படுதினாலும் அவர் இந்த வகையிலே கணிக்கப்படுவார்.
இன்றை காலை நம் வாழ்வில் கூட எத்தணையோ நிகழ்வுகள், பாவமான ரியங்களை செய்துவிட்டு இறைவன் அவற்றை  மறைத்திருக்க நாமாக அவற்றை பகிரங்கப்படுத்தி நம் பாவமன்னிப்பிற்கு நாமே தடைபோட்டுக்கொள்கிறோம்.

இது போன்ற நிகழ்வுகள் இனி நம் வாழ்வில் நிகழாமல் இருப்பதற்கு கவனமாக இருப்போமாக. ஆமீன்.

- பேரா. இஸ்மாயில் ஹஸனீ

வாழ்க்கைத் துணைவி

உங்கள் வாழ்க்கைத் துணைவி
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .
அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.
நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.
உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.
சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!
கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!
அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).
எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.
இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.
இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது
وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)
அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).
ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.
நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.
திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.
பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.
மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.
 நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.
 ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?
அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.
எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.
இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.
நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
 ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:
இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.
தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.
அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு

நன்றி :  தமீம் அன்சாரி