Wednesday, February 15, 2012

வேதனை தீர்க்கும் விஷேச துஆக்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்


நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2:155-156)


பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதுடன் அந்தச் சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளையும் சொல்ல வேண்டிய வார்த்தைகளையும் சொல்லித் தருகின்றன.
இப்ராஹீம் நபி அவர்களுக்கும் அவர்களது துணைவியார் சாரா அவர்களுக்கும் மிகக் கடுமையான சோதனை ஏற்படுகின்றது. அந்நேரத்தில் அவர்கள் தொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன் இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) என் சகோதரி என்று சொன்னார்கள்.

பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள் நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2217


இன்று உலகில பரவி வரும் டெங்கு சிக்குன்குனியா மற்றும் விஷக் காய்ச்சல் போன்றவற்றுக்காக அவரவர் தனியாக விரும்பிய நேரமெல்லாம் தொழுது இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.

சில சமயங்களில் தொழுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களிலும் ஏனைய எல்லாக் காலங்களிலும் சொல்லக் கூடிய துஆக்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அந்த துஆக்களில் ஒன்று தான் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்என்பதாகும்.
இந்தக் காய்ச்சல் எல்லாம் அல்லாஹ்வின் சோதனையாகும். இந்தச் சோதனையின் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைச் சொல்லாமல் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு தொழ வேண்டும். இந்த துஆ வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் கூறும் இந்த வழிமுறைகளைக் கையாள்பவர்களுக்கு அவன் வழங்குகின்ற அருட்கொடைகளை அடுத்த வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன் 2:157)
இவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள் என்ற புகழாரத்தையும் அல்லாஹ் சூட்டுகின்றான்.

இதற்கு அணி சேர்க்கும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு மணியான துஆவையும் இந்த துஆவுடன் சேர்த்து ஓதுமாறு கற்றுத் தருகிறார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா (இறைவா எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால் அதற்கு ஈடாக அதை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்த போது நான் அபூசலமாவை விட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்து வந்த குடும்பம் (அவருடைய குடும்பம் தான்) என்று கூறினேன். ஆயினும் இன்னாலில்லாஹி… என்று (மேற்கண்ட பிரார்த்தனையை) நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான். அறிவிப்பவர்: உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 1674)

இது போன்ற சோதனைகளின் போது நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குப் பகரமான உடல் நலத்தை அல்லது வேறு விதமான நன்மையை வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் ஏற்படும் போது கூறுவதற்காக மற்றொரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்துள்ளார்கள். லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது ஓதுவார்கள்.
பொருள்:

கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 6346)

அல்லாஹும்ம இன்னீ அப்து(க்)க வப்னு அப்தி(க்)க வப்னு அம(த்)தி(க்)க நாஸிய(த்)தீ பியதி(க்)க மாலின் ஃபிய்ய ஹுக்மு(க்)க அத்லுன் ஃபிய்ய களாவு(க்)க அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹு ல(க்)க ஸம்மை(த்)த பிஹி நஃப்ஸ(க்)க அவ் அல்லமத்ஹு அஹதன் மின் கல்கி(க்)க அவ் அன்ஸல்(த்)தஹு ஃபீ கிதாபி(க்)க அவ் இஸ்தஃர(த்)த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்த(க்)க அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ வநூர ஸத்ரீ வ ஜிலாஅ ஹுஸ்னீ வ தஹாப ஹம்மீ.

(பொருள்: இறைவா! நான் உன் அடிமை! உன் அடியாரின் மகன்; உன் அடியாளின் மகன். என் நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. உன் முடிவே என்னிடம் நடக்கிறது. உன் தீர்ப்பு என்னிடம் நியாயமானது. குர்ஆனை என்னுடைய இதயத்தின் வசந்தமாகவும் என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும் என் கவலையை களையக் கூடியதாகவும் என் துக்கத்தைப் போக்கக் கூடியதாகவும் நீ ஆக்கி வைக்க வேண்டும் என்று உனக்கு நீயே வைத்துக் கொண்ட அல்லது உனது படைப்பில் நீ யாருக்கேனும் கற்றுக் கொடுத்த அல்லது உன் வேதத்தில் இறக்கியருளியஅல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் தேர்வு செய்த உனக்குரிய ஒவ்வொரு பெயரையும் வைத்துக் கேட்கிறேன்.)

துக்கமும் கவலையும் ஏற்பட்ட ஒருவர் சொன்னால் அல்லாஹ் அவருடைய துக்கத்தையும் கவலையையும் போக்கி விடுகின்றான். அவருக்கு மகிழ்ச்சியை அதற்குப் பகரமாக்கி விடுகின்றான்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! அதைச் செவியுற்றவருக்கு அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலி) (நூல்: அஹ்மத் 3528)
மீன்வாசி (யூனுஸ் நபி) மீன் வயிற்றில் இருந்த போது செய்த பிரார்த்தனை :
லா இலாஹ இல்லா அன்(த்)த சுப்ஹான(க்)க இன்னீ குன்(த்)து மினல் ளாலிமீன் (பொருள்: உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்)

எந்தவொரு சோதனையிலும் ஒரு முஸ்லிம் இதைக் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பதிலளித்தே விடுகின்றான். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) (நூல்: திர்மிதி 3427)
மணி மணியான இந்த துஆக்கள் அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் நமக்குக் கற்றுத் தரப்பட்டவை. ஒப்புக் கொள்ளப்படும் இந்த அரும் பெரும் துஆக்களை இந்தச் சோதனையிலும் வேறெந்தச் சோதனையிலும் ஓதி சுகம் பெறுவோமாக!

மர்மக் காய்ச்சல் தண்டனையா? சோதனையா?

ஏற்கனவே டெங்கு மலேரியா மூளைக் காய்ச்சல் எனப் பல்வேறு காய்ச்சலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கையில் புதுப் புது ரகமாய் வெளியாகும் நோக்கியா போன் வரிசையைப் போன்று இப்போது புதுப்புது பெயர்களில் காய்ச்சல்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் சிக்குன்குனியா போன்றவை இந்த வரிசையில் உள்ள காய்ச்சல்களாகும்.

இறக்கை கட்டி வந்து மக்களைத் தாக்கி முடமாக்கி தற்காலிகமாகப் படுக்க வைத்தும் நிரந்தரமாகப் படுக்க வைத்தும் வேடிக்கை பார்க்கும் இந்த ராட்சஷப் பறவையைப் பார்த்து மக்கள் பயத்தில் ஆடிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.
பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் போன்றவை உலகளாவிய காய்ச்சல்கள் ஆகும்.