Tuesday, February 21, 2012

'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்


பிலால், இறைத்தூதரின் நெருங்கிய தோழர். ஒடுக்குமுறையை அகற்றி நீதத்தை நிலைநாட்டிடும் இறைத்தூதரின் போராட்டம் மற்றும் வெற்றியின் அரிய தருணங்களை அடிமையாக இருந்து, விடுவிக்கப்பட்டு, இஸ்லாமிய வரலாற்றின் நாயகர்களுள் ஒருவராக உயர்ந்த பிலால்(ரலி) அவர்கள் தன் குரலிலேயே கூறினால் எப்படி இருக்கும்...? ஹெச்..எல்.க்ரெய்க் இந்நூலினை அமைத்திருக்கும் விதம் வரலாறு வாசிப்பில் ஒரு புத்தனுபவம்.

இந்த புத்தகத்தை படிக்க கையிலேடுத்தவன் கிழே வைக்க மனமில்லை வார்த்தைகள் அழகாக கோர்க்கப்பட்டு அழகு தமிழ் நடையில் உண்மையில் வாசிப்பில் புது அனுபவத்தை உணர்ந்தேன் அதனை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

பிலால் அடிமை எனும் நிலையில் அவரின் வார்த்தைகள்.

எதையும் அறிந்தவனல்ல அடிமை. அவன் எப்போதும் எதிர்பார்த்திருப்பவன். எஜமானின் குரலை ஒத்த வேறு குரல் ஏதும் அவனுக்கில்லை. எஜமான் அழைக்கும் போது அவனது குரலோசையிலிருந்து ஒளிந்துக் கொள்ள முடியாது. அவன் அழைக்கும் தொனிக்க்குள் அல்லது அவனது விழிக்குள் இல்லாது போனால் நீ ஒழிந்தாய். அவன் உன்னை வாங்கியுள்ளான்,அதன் விலை-உனது எஞ்சியிருக்கும் வாழ்க்கை.

பிலால் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்ட போது


இஸ்லாத்தை ஏற்ற அம்மார் எனும் அடிமை சித்ரவதை செய்வதற்காக என் எஜமானனிடம் கொண்டு வரப்பட்டபோது அங்கு சுவரில் சாய்ந்து நின்றேன் நான்.அம்மாரிடம் என் எஜமான் “முஹம்மது உமக்கு என்ன போதிக்கிறார்?”
உலகத்து மக்கள் அனைவரும், ஒரு சீப்பின் பற்களைப் போல இறைவன் முன் சமமானவர்கள்.”


இந்த சில சொற்கள் கேட்டு, சுவரில் சாய்ந்திருந்த ஓர் அடிமை, பிலால் ஆகிய நான் என் உடல் முழுவதும் குளிர்ந்து நடுங்குவதை உணர்ந்தேன். முகம் சிவந்தவராக என் எஜமான் பிழம்பானதையும் உணர்ந்தேன். எஜமானுக்குரிய அதே நாடித்துடிப்பு அடிமைக்கும் இருப்பதில்லையே!
“என்ன எஜமானுக்கு அடிமை சமம் என்றா சொல்கிறாய்...?” சலசலக்கும் பட்டின் அசைவொலியோடு அம்மரை நெருங்கிய என் எஜமான் உமையா வினவினான்.

இஸ்லாத்தை ஏற்று சுகந்திர மனிதராக இறைத்தூதருடன் பிலால்


என் கரம் பற்றிய முஹம்மது, முதன் முதலாகத் தன் அருகே அமர்வதற்காக என்னை இழுத்தார். நான் தயக்கம் காட்டியிருக்க வேண்டும். என் வாழ்நாளில் ஒருபோதும் குறைஷிய(உயர் குலத்தைச் சேர்ந்த) வம்சத்தவர் எவர் முன்னாலும் அமர்ந்திருந்ததில்லை. நிற்பது மட்டுமே என் உரிமை. தயங்கினேன் நான். அதை முறிக்கவென முஹம்மது கூறினார்:"நாம் நின்று கொண்டிருந்தால் அலீ தமது வித்தைகளை காட்டமாட்டார்" அவர் அருகில் அமர்ந்தேன். அப்போது தொடங்கியது எம் தோழமைத்துவம்.

உத்தமர் அபூபக்கர் பிலாலின் அடிமை சிந்தனையை தகர்த்து ஏறிதல்.


"ஆ பிலால்...பிலால்... நீர் செய்வதற்குப் புதிய அலுவல் ஒன்று உண்டு. இதுவரையும் உழைக்காத வகையில் நீர் இனி உழைப்பீரா?”

நான் என்ன பதில்தான் கூறலாம்? "அப்படியே எஜமான்!"என்றேன்.

என் பதில் அவரைத் துயருத்தியது. என் சொந்த இருளுலகில் மீண்டும் நான் பாதம் பதித்து, அவரது பார்வையிலிருந்து மறைந்து விட்டேன். என் முன்னைய அடிமைத் தனத்துள் மீண்டும் மூழ்கி விட்ட நான் அளித்தது அடிமையின் விடை - 'அப்படியே எஜமான்!'.நான் தலை தாழ்த்தி நின்றது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்தது.

அபூபக்கர் அவர்கள் கையில் வைத்திருந்த பால் வாளியைக் கிழே வைத்து, எனது இரு செவிகளையும் பற்றிய அபூபக்கர் தனது நெற்றியை எனது நெற்றியில் முட்டியவராகக் கூறினார்: "நான் சொல்வதைக் கேளும் பிலால்! நீர் ஒரு சுகந்திர மனிதர். உமக்கு எஜமானர்கள் இல்லை. ஆனால் சுகந்திரவானாக இருக்க நீர் கற்க வேண்டும்."

நெற்றியின் மோதுதலது தாளத்துக்கேற்ப ஆம்... ஆம்... என்றேன் நான்.

சட்டேன சிரித்து அவர் என் செவிகளை விடுத்தார். “நான் உமக்கு என்னதான் கற்பிப்பேன்? உம்மை யாரும் அழைக்கும்போது கலவரம் அடையாதிருக்க... பிறர் முகங்களை தயக்கமின்றி ஏறிட்டு நோக்கிட... உமது நிழல் நிச்சயமாக உமதே என்ற உணர்வு கொள்ள... ஆம்... இவையேல்லாம் முக்கியமானவை.”

இப்படி புத்தகம் முழுவதும் பிலால் (ரலி) அவர்களின் வரலாறு அழகான கோணத்தில் நாம் முன் விரிகிறது.
 
வெளியிடு
மெல்லினம் பதிப்பகம்
ஆங்கில ஆசிரியர்
ஹெச்.ஏ.எல்.க்ரெய்க்
தமிழில்
அல்-அஸுமத்