அளவற்ற
அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
மறுமையை
நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது
மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும்,
மறுமையில் அல்லாஹ்
நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து
வைத்திருக்கின்றான்.
சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை
கூறி, அதன் பக்கம் மக்களை
ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும்
அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும்
நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம்.
சுவர்க்கத்தின்
பெயர்கள்:
1. அல்
ஜன்னத்
2. தாருஸ்
ஸலாம்3. தாருல் குல்த்
4. தாருல் முகாமத்
5. ஜன்னதுல் மஃவா
6. ஜன்னாத்து அத்ன்
7. தாருல் ஹயவான்
8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
9. ஜன்னாத்துன்னயீம்
10. அல் மகாமுல் அமீன்
11. மக்அது ஸித்க்
12. கதமு ஸித்க்
சுவர்க்க
வாசலின் பெயர்கள்
1. பாபு
முஹம்மது
2. பாபுத்தவ்பா3. பாபுஸ்ஸலா
4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்)
5. பாபுஸ்ஸகாத்
6. பாபுஸ்ஸதகாத்
7. பாபுல் ஹஜ்ஜி வல் உம்ரா
8. பாபுல் ஜிஹாத்
குர்ஆனில் சுவர்க்கம்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும்
நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில்
(ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்”
(என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம்
நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு
நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும்
மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக்
கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச்
சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள்
மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம்
தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”நீங்கள் செய்து
கொண்டிருந்ததன் (நன்மையான) காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங்
கொண்டீர்கள். ”உங்களுக்கு அதில் ஏராளமான
கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள்
உண்பீர்கள்” (எனக் கூறப்படும்). 15:45 – 73
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. கனி
வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள்
கண்ணியப்படுத்தப்படுவார்கள். இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் ஒருவரையொருவர்
முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த
குவளைகள் அவர்களை சுற்றி கொண்டுவரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது.
அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும்,
நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில்
அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அப்பொழுது)
அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:40-50
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற இடத்தில்
இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும்
(இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய
பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து
ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத்
தவிர, அங்கு மரணத்தை அவர்கள்
அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை
நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள்
கொடையும்; இதுவே மிகப் பெரிய
வெற்றியுமாகும். 44:51 – 57
(பொன்னிழைகளால்) ஆக்கப்
பெற்ற கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக அவற்றின் மீது
சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக்
கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு
(அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை
வலிக்குள்ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின்
(பறவைகளின்) மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு
இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க
வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள்
வீணானதையும், பாவமுண்டாக்குவதையும்
(கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே
(செவியுறுவார்கள்). இன்னும் வலப்புறத்தார்கள்! –
வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்
இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் –
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை
மேலும், உன்னதமான விரிப்புகளில்
(அமர்ந்திருப்பர்). நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும்,
சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி
வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு
கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). 56:15-40
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து
(சுவர்க்கக் காட்கிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே
(அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த)
முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற)
மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரையிடப்பட்ட தெளிவான
(போதையோ, களங்கமோ அற்ற)
மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம்
நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். 83:22-28
இன்னும்
இது போன்ற பல வசனங்களும் இத்தொடரில் உள்ளது. சுருக்கத்திற்காக இத்துடன்
முடிக்கிறேன்.
மறுமையில்
அல்லாஹ்வின் சந்திப்பு
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர்கள்
வானில் பதினான்காம் பக்கத்து நிலவை(பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள். அப்பொழுது
கூறினார்கள். நீங்கள் இந்த நிலவைப் பார்ப்பதைப் போல(கியாமத் நாளில்)உங்கள் ரப்பைக்
கண் கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும்
இருக்காது. (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும், அல்லாஹுதபாரக வதஆலா, அவர்களிடம் வேறு எதனையும்
நீங்கள் நாடுகிறீர்களா? அதனை நான் உங்களுக்கு அதிகப்
படுத்துகிறேன். என்று கூறுவான். அதற்கவர்கள், எங்கள் இரட்சகனே! நீ
எங்களின் முகங்களை வெண்மையாக்கி விட்டாய். எங்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்து
விட்டாய். நரகை விட்டும் எங்களைக் காப்பாற்றி விட்டாய். (நீ எங்களுக்கு எல்லா
விதமான அருட்கொடைகளையும், இன்பங்களையும், அளித்து விட்டாய்! இனி எங்களுக்கு வேறு என்ன வேண்டும்) என்பார்கள்.
அப்பொழுது அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள திரையை அகற்றி
விடுவான். (அப்பொழுது அவர்கள் தங்கள் இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை
பெறுவார்கள்) தங்கள் இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்குப்
பிரியமானதாகக் கொடுக்கப்படவில்லை. (அவர்களது இரட்சகனைப் பார்ப்பதே எல்லாவற்றையும்
விட அவர்களுக்கு மிகப் பிரியமானதாக இருக்கும்) முஸ்லிம்: ஸுஹைபு(ரலி)
இன்ஷா
அல்லாஹ் தொடரும்..
சுவனப்பாதை
வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்
(தொடர்-2)