அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால் துவங்குகிறேன்
மஸ்ஜிதுந் நபவீயின் வடக்குப்பகுதியில் ஒரு திண்ணை
இருந்தது.அதன் மீது ஈச்சந்தட்டியால் ஒரு பந்தல் போடப்பட்டி ருந்தது.அதில் ஏழை
அகதிகள் தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை 10,30,70,92,93,400 என்று பலவிதமாகக் கூறப்படுகிறது.
அஸ்ஹாபுஸ்ஸுஃப்ஃபாவில்70 பேர்களைப்பார்த்ததாக ஆபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். (புகாரி) இவர்களல்லாத70 பேர்கள் பீர் மவூனாவுக்குப் பிரச்சாரத்திற்காக
அனுப்பப்பட்டார்கள். இவர்கள் பின்னர் அங்கே படு கொலை செய்யப்பட்டார்கள்.
இவர்கள்“திண்ணைத்
தோழர்கள்”என்ற பொருளில் “அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபாஹ்” என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் பள்ளிவாசலின் ஒரு பகுதியில்
வாழ்ந்து வந்ததனால்” இஸ்லாத்தின் விருந்தினர்கள்” என்றும் கருதப்பட்டு வந்தார்கள்.இவர்கள்
பல்வேறு கோத்திரங் களையும், நாட்டினரையும்
சேர்ந்தவர்கள்.இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:-
1. அபூஹுரைரா(ரலி)
2. அபூதர் அல்கிபாரி (ரலி)
3. கஃப் இப்னு மாலிக் அல்அனஸாரி (ரலி)4. ஸல்மானுல் பார்ஸி
5. ஹன்ளலா இப்னு அபீ ஆமிர் ( கஸீலுல் மலாயிக்கா (ரலி)
6. ஹாரிதா இப்னு அந்நுஃமான் (ரலி)
7. ஹுதைபத்துல் யமான் (ரலி)
8. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)
9. ஸுஹைப் இப்னு ஸினான் இல்ரூமி (ரலி)
10. ஸாலிம் மவ்லா அபீ ஹுதைபா (ரலி)
11. பிலால் இப்னு ரபாஹா (ரலி)
12. ஸஃது இப்னு மாலிக் அபூ ஸயீது அல்குத்ரீ (ரலி)
சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற பதின்மரில்
ஒருவரான ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இத்திண்ணையில் சில காலம் வாழ்ந்து
வந்ததாகக் கூறப்படுகிறது.இத்திண்ணையில் வாழ்ந்து வந்தவர்கள் திருமணம் முடிக்க
வசதியல்லாததன் காரணமாக மணமாகாதவர்களாகவே இருந்து வந்தனர்.வறுமை இவர்களின் நீங்காத
நண்பனாகவே இருந்து வந்தது.
எளிமையும் மத பக்தியும், மிகுந்த இவர்கள்,சிறந்த அறிவாளிகளாக இருந்து வந்தனர். இவர்கள் .இரவு பகலாக தங்களின் நேரத்தை
இறை வழிபாட்டிலும், திருக் குர்ஆனை ஓதுவதிலும்,கழித்து வந்தனர். நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு
அவற்றை இவர்கள் மனனம் செய்து வந்தார்கள்.
ஒரு முரட்டு ஆடையைதைத் தவிர இவர்களிடம்
வேறு எந்த ஒர் ஆடையும் இருக்கவில்லை. ஒன்று அது உடுத்திக் கொள்ளும் வேட்டியாகவோ, கழுத்திலே கட்டப்படும் ஒரு துணியாகவோ
இருக்கும்.அது முழங்கால்கள் வரை தொங்கும். அல்லது கரண்டைக் கால் வரை இருக்கும்.
எனவே குளிப்பதற்கு இவர்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. இவர்கள்
அணிந்திருந்த வேட்டியும் அழுக்காகவே இருக்கும். தொழும்பொழுது குனியுங்கால், தங்களின் வெட்கஸ்தலம் தெரியாவண்ணம்
வேட்டியின் விளிம்புகளை பிடித்துக் கொள்வர்.
அரை நிர்வாணமாக இருந்த இவர்கள்,குர்ஆனை ஓதிக் கேட்க ஓரிடத்தில் குழுமின் ஒருவரையொருவர்
மறைத்து நெருக்கமாக அமர்வர். இவ்வித நிலையிலும் இவர்கள் நிறைவாகவே வாழ்ந்து
வந்தனர்.