Thursday, May 17, 2012

நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் நற்குணங்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அகிலத்திற்க்கோர் அருட்கொடையாம் அண்ணலம் பெருமானார் நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் நானிலம் போற்றும் நற்குணவாதியாகத் திகழ்ந்தார்கள் என்பதை முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடுயின்றி உலக மாந்தர்கள் அனைவரும் அறிவர். இதை மாற்று கருத்துடைய பல்வேறுபட்ட அறிஞர்களின் கூற்றும், The Hundred போன்ற புகழ் பெற்ற நூற்களும்கூட மெய்பித்துக் கொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் நான் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைப் பற்றிச்சொல்வது என்பது சூரியன் ஒளி தருகிறதுஎன்பதற்கு ஒப்பாகும். இருப்பினும் நாம், நமது குடும்பத்தார் விஷயத்திலும் மற்றவர்கள் விஷயத்திலும் நமது குணநலன்களை சீர்தூக்கி பார்த்து சீர்திருத்திக் கொள்ளவும், இன்னும் நற்குணங்களை வளர்த்துக் கொள்ளவும் வளப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்ற அடிப்படையிலேயே இந்தக் கட்டுரையினை எழுத முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்களது நற்குணத்தின் மகத்துவம்

நாகரீகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, சரியான கொள்கை கோட்பாடுகளற்ற, மௌட்டீக மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கி திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கே அல்லது நம்பிக்கைக்கே எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்றால், நிச்சயமாக! அந்த மக்கள் பிற மதங்களை ஆராய்ந்தோ அல்லது இறைவன் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.


மாறாக நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக ஆவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும் நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின்பால் நாட்டங்கொள்ளச் செய்தது என்றால் மிகையாகாது. உங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேனே (ஆகவே நான் கூறுவது உண்மைதான் என்பதை) விளங்க மாட்டீர்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 10: 16) என்று இறைவன் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைக் கொண்டு அந்த மக்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது அல்லது ஒரு நிரந்தர நல்விளைவினை ஏற்படுத்தாது.



இன்னும், இறைவன் தனது திருமறையிலே தனது தூதரை நோக்கி நீர் கடின சித்தமுடையவராக இருந்திருந்தால் உம்மை விட்டு இந்த மக்கள் வெருண்டோடி இருப்பார்கள்என்று கூறுகிறான். ஆக நபி(ஸல்) அவர்களை கடுமையானவராகவோ அல்லது முன்னுக்குப்பின் முரணாகவோ அந்த மக்கள் கண்டிருந்தால், அவர்களை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள்.

கொள்கைப் பற்றியெல்லாம் அந்த தருணத்தில் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நற்குணம் அந்த மக்களை இஸ்லாத்தில் நுழைய செய்தது மட்டுமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் நற்குணவாதியாகவும் சத்திய சீலர்களாகவும் மாற்றியது.

ஏன் இவ்வளவு காலம் கடந்த பின்பும்கூட அவர்களது நற்குணமானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களது அப்பழுக்கற்ற வாழ்க்கையை அறியும் ஒருவன் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்வதோடு சத்தியத்தையும், தர்மத்தையும், மனித நேயத்தையும் நிலைநாட்ட எந்த தியாகத்தையும் செய்ய தயாராகி விடுகிறான் என்பது கண்கூடு.

ஈமானில்(இறைநம்பிக்கை)பரிபூரணம் பெற்றவர்கள் அதிசிறந்த பண்பாளர்களே’- ஆதாரம்: திர்மிதீ.

(நாளை மறுமையில்) மீஸான் என்னும் எடை தட்டில் அதிக கணமுள்ள ஒரு நன்மை இருக்குமெனில் அது நற்குணமேஆதாரம்: திர்மிதீ.

உங்களில் சிறந்தோர் அதிசிறந்த பண்பாளர்களேஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது எது? ஏன வினவப்பட்டபோது

தக்வாவும்(இறைஅச்சம்), நற்குணங்களும்தான் என்றார்கள் நபியவர்கள் ஆதாரம்: திர்மிதீ.

இவ்வாறு நற்குணத்தை வலியுறுத்திய முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அதற்கு இலக்கணமாகவும் அழகிய முன்மாதிரியாகவும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். ஏல்லாக் காலத்திலும், எல்லா மக்களிடமும், எல்லா நிலையிலும் அவர்கள் நற்குணத்தின் நாயகராகத் திகழ்ந்தார்கள்.

ஏந்தளவுக்கு என்றால் அவர்களது நற்குணத்தை வறுமையோ, வளமோ, ஆட்சி அதிகாரமோ, இன்பமோ, துன்பமோ, விருப்போ, வெறுப்போ எதுவுமே பாதித்தது இல்லை. அதுமட்டுமில்லை பணக்காரன், ஏழை, அரசன், ஆண்டி, அறிஞன், பாமருன், நம்மவன், அந்நியன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் நீதியோடும், நேர்மையோடும், அன்போடும், கருணையோடும் நடந்து கொண்டார்கள்.

மகத்தான மனிதர்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நற்குணவாதியாகத் திகழ்வதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையைக் கடந்து விட்டால் நற்குணமெல்லாம் போயே போச்சு. ஆனால் நபி(ஸல்) அவர்கள் நற்குணத்தைப் பரிபூரணப்படுத்தவே நான் இறைவன் புறத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்என்று பறைசாற்றினார்கள். அவ்வாறே அவர்கள் வாழ்ந்தும் காட்டினார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு நற்குணத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதை உள்ளங்களிலே பதித்துவிட்டும் சென்றார்கள்.

இனி அறிவேம் அண்ணாலாரின் அருங்குணங்களை. ஒரு ஆணுக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய, இன்னும் அந்த ஆணை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் அறியக்கூடியவர் மனைவிதான் அந்த ஆணின் குணத்தைபற்றி அறிந்துக்கொள்ள உதவும் முதல் உறைக்கல்லாவார்கள். உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவறேஎன்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அவ்வாறே, தாம் சொன்னதற்கு ஏற்ப தமது மனைவிமார்களை துணைவியாகவும், தோழியாகவும்தான் நடத்தினார்களே தவிர அடிமைகளாகவோ, வேலைக்காரிகளாகவோ நடத்தவில்லை. வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள், தமது கிழிந்த ஆடைகளைத் தைப்பார்கள், பழுதுபட்ட தமது செருப்பை சரி செய்வார்கள். இன்னும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள் என்பதை பல ஸஹீஹான ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது. புஹாரி 676, 5363, 5190 முஸனத் அஹ்மத் 23756, 24176 அபூதாவூத் 2214.

இறைத்தூதர் என்ற பிரத்யேக அனுமதியால் பல மனைவிமார்களை பெற்றிருந்தும் அவர்களில் ஒருவர் கூட நபி முஹம்மத்(ஸல்) அவர்களை குறித்து அதிருப்தியுறவில்லை. இவ்வளவுக்கும் அவர்கள் அனைவரும் நபி முஹம்மத்(ஸல்) அவர்களோடு செழிப்பான வாழ்கை வாழவில்லை. உணவு, உடை, உறையுள் என்று அடிப்படை தேவையில் கூட பற்றாக்குறையான வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

அதேபோல குடும்பத்தார்களோடு மட்டுமில்லாமல் பணியாளர்களிடத்திலும் அவர்கள் நடந்துகொண்ட முறை போற்றுதலுக்குரியது. பணியாளர்களை அடிமைகள் போல் நடத்திய அந்த காலத்தில் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் பணியாளர்களின் வியர்வை உலரும் முன் அவர்களின் கூலியைக் கொடுங்கள் என்று பணியாளர்களின் உரிமைகளை பிரகடனப்படுத்தினார்கள். பணியாளர் வேலை செய்ய மறுக்கும்போது கூட கடிந்து கொள்ளவில்லை, வார்த்தைகளால் காயப்படுத்த வில்லை மென்மையைக் கொண்டே அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.

அனஸ்(ரலி) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படி செய்தாய்? என்றோ நான் செய்த ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்து இருக்கமாட்டாயா? என்றோ கடிந்து கொண்டதில்லை.ஆதாரம்: முஸ்லிம் 4272.

இன்னும் பணியாளரின் குற்றங்களை எத்தனை தடவை மன்னிப்பது?’ என்று ஒருவர் மூன்று முறை கேட்டார் அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளும் எழுபது தடவை மன்னித்து வாரும்என்றார்கள். ஆதாரம்: அபூதாவூத், திர்மிதீ.

இவ்வாறு கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் நற்குண வடிவாய் திகழ்ந்தார்கள்.

தன் பக்கத்து அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை. ஆதாரம்: மிஷ்காத்.

அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்தும், உம் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்.ஆதாரம்: முஸ்லிம்.

இவ்வாறு ஜாதி மத பேதங்கள் கடந்து அண்டை வீட்டாராக இருக்கக்கூடிய எல்லோரிடத்திலும் மிகவும் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதை நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள். அதனுடைய தாக்கம் எந்தளவுக்கு இருந்ததென்றால் அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) என்ற நபித்தோழரின்

வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது அவர் வீட்டுக்கு வந்தவுடன் நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்கு கொடுத்தீர்களா? என இரு முறை கேட்டுவிட்டு, ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் என்னும் அளவுக்கு ஜிப்ரீல்(அலை) எனக்கு வலியுறுத்திக்கொண்டே இருந்தார் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகவும்சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதீ 1866.

அண்டை வீட்டாரோடு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நடந்துக் கொண்ட முறையைப் பார்த்தால் நிச்சயமாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.உமரே!

(அண்டை வீட்டாராகிய) நம்மோடு நபி(ஸல்) அவர்கள் நடந்துக்கொண்ட முறையை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு வரும் அன்பளிப்புகளை நமக்கு அனுப்புவார்கள். நாம் பயன்படுத்திவிட்டு மீதமுள்ளதை அவர்களுக்கு அனுப்புவோம். அந்தளவுக்கு நம்மை நேசித்தார்கள்.என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதே போல கடன் கொடுத்த ஒருவர் அதை வசூலிக்கும்போது நபி(ஸல்) அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டார். இதனைப்பார்த்து நபித்தோழர்கள் கோபமுற்று, அவரை தாக்க முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாக) பேசும் உரிமை உள்ளது என்று கூறினார்கள். மேலும் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்கு கொடுங்கள் எனக்கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அதைவிடக்கூடுதல் வயதுடைய ஒட்டகம்தான் உள்ளது என்று நபித்தோழர்கள்; கூறினார்கள், உடனே அவருக்கு அதையே கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத்திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் எனக்கூறினார்கள். ஆதாரம்: புகாரி 2306, 2390
 

நம்மை விட கொஞ்சம் அதிக பலமுள்ளவர்களிடம்; கடன் கொடுத்து விட்டாலே நயந்து, பணிந்து தான் கேட்க வேண்டியுள்ளது. அதிகார வர்க்கமென்றால் கேட்கவே வேண்டாம். அவர்களாக பார்த்து கொடுத்தால்தான் உண்டு. ஆனால் இங்கு ஒரு வல்லரசின் அதிபரிடம் மிகச்சாதாரண ஒருவர் அதுவும் முதல் தடவை கடன் கேட்கும் போதே கடுமையாக நடந்துக் கொள்கிறார்.

பக்கத்தில் உள்ளவர்களுக்குகூட அதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியவில்லை இருப்பினும் அந்த மனிதரிடம் மிகவும் தன்மையாக நபி(ஸல்) அவர்கள் நடந்துக் கொள்கிறார்கள். இன்னும் வாங்கியதை விட அதிகமாக கொடுக்கிறார்கள். அதுதான் சிறந்தது எனவும் கூறுகின்றார்கள். ஏதோ ஓரிரு நபர்களிடம் மட்டும் இவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை, மொத்த மக்களிடமும் அவர்கள் நற்குண நாயகரே.

நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் போர்க்களத்திலிருந்து மக்களோடு திரும்பிக் கொண்டிருக்கும்போது மக்கள் முண்டியடித்துக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் தங்களது தேவைகளை கேட்கலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்து விட்டார்கள். அவர்களது மேலாடையும் முள்ளில் சிக்கிக்கொண்டது.
எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்என்று கூறினார்கள்; இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகம் இருந்தால் அவை அனைத்தையும் நான் உங்களுக்கு பங்கிட்டிருப்பேன். என்னை நீங்கள் கஞ்சனாக காணமாட்டீர்கள் எனவும் கூறினார்கள். ஆதாரம்: புகாரி 2821, 3148.

ஒரு நாட்டின் அதிபரிடம் குடிமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதை அதுவும் தேவையை முறையிடும்போது இவ்வாறு நடந்துக் கொள்வதை கற்பனை செய்ய முடியுமா? அவ்வாறு நடந்து கொண்டால் அதிபர் வேண்டாம் சாதாரண ஒரு அதிகாரியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்! ஆனால் நபி(ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறையையும், சொன்ன பதிலையும் பாருங்கள்.
ரு கடுமை இல்லை, ஒரு சினம் இல்லை மாறாக உங்களுக்கு இப்போதைக்கு உதவ முடியாமல் இருக்கின்றேனே என்ற வருத்தம் தான் தொணிக்கிறது, அதனால் தான் மகத்தான மாமனிதர் என்று போற்றப்படுகிறார்கள்.

அது போல ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், ‘சாதரணமாக இருப்பீராகஉலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன் தான் நான்என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். ஆதாரம்: இப்னுமாஜா 3303.

அன்றைய மன்னர்களிடம் மக்கள் அப்படிதான் நடுங்கிட வருவார்கள், அப்படி தான் வரவேண்டும் என்ற நிலையிருந்த காலகட்டத்தில் ஆண்டிக்கும், அரசனுக்கும் முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக நடந்து கொண்டார்கள் என்பதை பார்த்தீர்களா?

ஒருநாள் அன்பளிப்பு வந்த ஆட்டை சமைத்து, தானும் மக்களும் சாப்பிட அமர்ந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இதனைக் கண்ட ஒரு கிராமவாசி என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதைபிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்கள்.

சுப்ஹானல்லாஹ்! சாதாரண மனிதன்கூட சகித்துக் கொள்ளாத எத்தனையோ விஷயங்களை மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்தும் அவர்கள் சகித்துக்கொண்டு நடந்து கொண்ட முறை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

அகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள்.ஆதாரம்: புகாரி 2837, 3034.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ஆதாரம்: புகாரி 3906

மக்களோடு மக்களாக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இருப்பதால் உள்ள சிரமத்தைக் கண்ட அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கலந்து பேசி ஒரு கூடாரத்தை தனியாக உங்களுக்கு அமைத்து தருகிறோம்என்று கேட்டதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையை பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காளை மிதித்த நிலையிலும் அவர்களுடன் நான் கலந்து வாழவே நான் விரும்புகிறேன்.

அவர்களிடம் இருந்து அல்லாஹ் என்னை பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்என்று கூறினார்கள். ஆதாரம்: பஸ்ஸார் 1293.

இப்படி ஏராளமான சம்பவங்களின் மூலம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஏன் சாதாரண மக்களைவிடவும் அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டார்கள். உச்ச பச்ச இரு அதிகாரங்களை பெற்றிருந்தும், உலக இன்பங்களையும், செல்வங்களையும் தனது காலடியில் கொட்டச் செய்வதற்கான சக்தி பெற்றிருந்தும், உணவு, உடை, உறையுள் இன்னபிற வாழ்க்கை வசதிகள் மக்களிடமுள்ள பழக்கவழக்கங்கள் என்று வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் எளிமை, மென்மை, நேர்மை, சரிமை என்ற உன்னதத் தன்மைகளோடு விளங்கினார்கள். இவைகளை எல்லாம் சிந்தித்தால் மறுமையில் வெற்றி பெறுவதுதான், ஒவ்வொரு மனிதனுக்கும் இலட்சியமாக இருக்க முடியும் என்ற சூட்சுமம் விளங்காமல் போகாது.


நமது நற்குணத்தை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். அதனால் தான் கெட்டவர்களுடன் கெட்ட குணத்தோடு நாம் நடந்துக் கொள்கிறோம். ஆனால் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வந்த முஹம்மத் நபி(ஸல்) அவர்களை பாருங்கள்;.

ஒரு முறை நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அவர்களது மேலங்கியை தோள்பட்டை பதியும் அளவுக்கு இழுத்துக்கொண்டு உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்கு தந்து உதவிடுவீராக என்று கேட்டார். அவரை நோக்கி திரும்பி புன்முருவல் பூத்துவிட்டு அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி 3149, 5809.

அதே போல வேறொரு சமயம் இன்னொருவரும் நபி(ஸல்) அவர்களது பிடரி சிவக்க மேலாடையை பிடித்து இழுத்து முஹம்மதே! எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை தருவீராக. உமது செல்வத்திருந்தோ உமது தகப்பனார் செல்வத்திருந்தோ நீர் தரப்போவதில்லைஎன்று கூறினார்.
அப்போது இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை தரமாட்டேன்என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியும் மூன்று முறையும் விடமாட்டேன் என்று சொன்னவருக்கு அந்நிலையிலேயே அவர் கேட்டபடி பொருட்களை தர ஆணையிடுகிறார்கள். மக்கள் ஆவேசப்பட்டு அந்த மனிதரை நோக்கி விரைந்த போது அனைவரையும் அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தார்கள். ஆதாரம்: நஸயீ 4694, அபூதாவூத் 4145.

சுப்ஹானல்லாஹ்! இந்த மாமனிதரை வழிகாட்டியாகவும், தலைவராகவும் பெற்றதற்கு இறைவனுக்கு அனுதினமும் அதிகமதிகம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். மன்னிப்பதையே பண்பாகக்கொண்ட மாநபி முஹம்மத்(ஸல்) அவர்கள் ஸுமாமா என்பவரிடம் நடந்து கொண்ட முறையையும் அவர் இஸ்லாத்தை தழுவியதையும் நாம் அறிவோம்.

அதே போல ஒரு கிராமவாசி வந்து பள்ளியில் சிறுநீர் கழிப்பதைக் கண்டு மக்கள் அவரை விரட்டலானார்கள். இதைக் கண்ட நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டுவிடுங்கள்என்றார்கள் அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்து இது அல்லாஹ்வின் ஆலயம், இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது, தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவுகூறுவதற்கும் உரியதுஎன்று அறிவுரை கூறினார்கள். முஸ்லிம் – 429

இவ்வாறு மனிதனது கோபத்தையும், குரோதத்தையும், விரோதத்தையும் கிளரக்கூடிய எல்லா இடத்திலும் இந்த மாமனிதர் நடந்து கொண்ட முறையைப்பார்க்கும்போது நிச்;சயமாக! மனிதர்கள் என்றும் மனிதர்களாக வாழவும், அவர்கள் நேர்வழிபெறவும் அனுப்பப்பட்ட இறைதூதராக அல்லாமல் இவர்கள் இருக்கமுடியாது என்பதை நமது உள்ளங்கள் உண்மையிலேயே உணருகின்றன.

அடுத்தவர் சிந்திய சளியை அகற்றிய அதிபரை கண்டதுண்டா? புகாரி – 405

நாசத்தைக் கூறிய நயவஞ்சகனிடமும் நளினத்தை காட்டிய அதிபரைக் கண்டதுண்டா? (அஸ்ஸாமு அலைக்கும் சம்பவம்) புகாரி – 6024

அதிபரோ தரையில் நடக்க தான் நியமித்த அதிகாரியோ குதிரையில் இருக்க வாழச்சொல்லி வழியனுப்பிய அதிபரைக் கண்டதுண்டா? அஹ்மத் – 21040

நல்லது சொல்லி அல்லது கிடைத்தும் அமைதியாக வந்த அதிபரைக் கண்டதுண்டா? புகாரி – 1283

சிறுவர்களிடம் முந்திக்கொண்டு முகமன் கூறும் அதிபரைக் கண்டதுண்டா? புகாரி – 6247

போரிலும் கூட கெட்ட போர் முறைகளை மாற்றி திருத்தம் செய்து போர்களை கண்ட அதிபரைக் கண்டதுண்டா? புகாரி – 3014

இது போன்று அவர்களது நற்குணங்கள் இல்லை இல்லை பொற்குணங்கள் ஏராளம் ஏராளம்!

ஆவற்றையெல்லாம் இங்கே விரிவஞ்சி சுருக்கிவிட்டோம் பக்கங்களை கடந்துவிட்டோம்.

அன்புச் சகோதரர்களே! நபி முஹம்மத்(ஸல்) அவர்களது நற்குணத்தின் கடுகளவைக்கூட நான் உங்களுக்கு காட்ட வில்லை. அது ஒரு கடல் கரையைத்தான் தொட்டுப்பார்த்தோம். நாம் படிப்பினை பெறுவதற்கே தவிர, பெரிதாக எதையும் சொல்லிவிட முடிவதில்லை ஏன் தெரியுமா?!! அந்த ரப்புல் ஆலமீனே இறைவன் சொல்லுகிறான்.

 ‘(நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ – அல்குர்ஆன் 68:4

வஆகிர்தாவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை திருத்தியது, ஹாஜா முஹ்யுத்தீன் சகோ. ஷாகுல் ஹமீது சவூதி ஓஜர், ஜித்தா )